12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொலை: பசு பாதுகாவலர்கள் 5 பேர் ஹரியானாவில் கைது

By KU BUREAU

பரிதாபாத்: ஹரியானாவில் கடந்த 23-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பசுபாதுகாவலர்கள் என கூறிக்கொள்ளும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு ஆர்யன் மிஸ்ரா என்ற மாணவன் தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். இவர்களின் காரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. ஆனால் காரை ஓட்டிய ஆர்யனின் நண்பன் ஷாங்கி காரை நிறுத்தவில்லை. முந்தைய ஒரு தகராறு தொடர்பாக தன்னை கொல்ல குண்டர்கள் வந்துள்ளதாக கருதி காரை வேகமாக ஓட்டியுள்ளார். இதையடுத்து இவர்களின் காரை 5 பேர் கும்பல் மற்றொரு காரில் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டதில் ஆர்யன் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் அனில் கவுசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ், சவுரப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர். இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “ஆர்யன் உள்ளிட்ட நண்பர்களை பசு கடத்தல்காரர்கள் என தவறாக கருதி 5 பேர் கும்பல் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளது. பிறகு தவறான நபரை சுட்டுவிட்டதை உணர்ந்து அக்கும்பல் அங்கிருந்து தப்பியது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE