புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனையாகும் 431 பொருட்களை ராணுவ கேன்டீன்களில் (சிஎஸ்டி) விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
வெளிநாடுகளில் தயாராகும் டி.வி., பிரிட்ஜ், அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், ஷூ, குளிர் கண்ணாடி, மின் விசிறிகள் உள்ளிட்ட 431 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ராணுவ கேன்டீன்களில் தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதனால் அதிக அளவில் மேக்இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரான பொருட்கள் விற்பனையாகி வருகின்றன.
இதுகுறித்து சிஎஸ்டி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (சுய சார்பு இந்தியா இயக்கம்) திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாராகும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெளிநாட்டில் தயாராகும் பொருட்களை சிஎஸ்டி கேண்டீன்களில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டது.
இதன்மூலம் மேக் இன் இந்தியாதிட்டத்தின் கீழ் தயாரான பொருட்கள் கேன்டீன்களில் அதிகஅளவில் விற்பனைக்கு வைக்கப் படுகின்றன. இதனால் மேக் இன்இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
» பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேறியது மசோதா!
» வரலாறு படைத்த வங்கதேசம்: டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அபாரம்!
கேன்டீன்களில் தடை செய்யப்பட்ட 431 பொருட்களில் 255 பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே தயாராகி விற்பனைக்கு வருகின்றன. சிஎஸ்டி கேன்டீன்களில் கார், மோட்டார் சைக்கிள், மது வகைகள், வீட்டு உபயோக பொருட்கள், உணவுப் பொருட்கள், குளியலறை பொருட்கள், பைகள், கைகடிகாரங்கள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனையாகின்றன. தற்போது உள்நாட்டிலேயே இவைபெரும்பாலும் தயாராகி கேண்டீனுக்கு வருகின்றன. இது இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.