பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேறியது மசோதா! 

By KU BUREAU

கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவிப்புக்கு இணக்க. மேற்கு வங்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டு, பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையிலான பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதாவான ‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தை (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024’ சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநில சட்ட அமைச்சர் மோலோய் கட்டக், மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்.

இம்மசோதாவின்படி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் அல்லது நபர்களின் செயல்களால், பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தாலோ அல்லது உடல் ரீதியாக முடக்கப்பட்டாளோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியும். மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ஆர்.ஜி. கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இப்போது, ​​சிபிஐயிடம் இருந்து எங்களுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளை சிபிஐ தூக்கிலிட வேண்டும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசோதா. நல்ல எண்ணம் உள்ளவர் எவரும் இதை ஆதரிப்பர். ​​இந்த மசோதாவில் கையெழுத்திட மாநில ஆளுநரை, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மசோதா மீதான விவாதத்தை அடுத்து இன்று குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதனையடுத்து, இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE