புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்), மாநில மற்றும் மத்திய அரசுகளின் நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அரசு ஊழியர்களின் நிதி எதிர்காலத்தையும் பாதுகாக்கும் என மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 24-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பணவீக்கத்தை சரி செய்தல் மற்றும் பிற சலுகைகளுடன், கடைசி 12 மாத சராசரி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு குறையாமல் மத்திய அரசில் பணிபுரிந்தோருக்கு இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின்சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறலாம். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் . மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியம் திட்டம் பென்சன்தாரர்களுக்கு நம்பகமான பாதுகாப்பினை வழங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயினால் கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்யாமல் இந்த உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அதாவது ஊழியர்களும், அரசாங்கமும் ஓய்வூதிய நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
» காங்கேயத்தில் 7 வீடுகளின் பூட்டு உடைப்பு: 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
» சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் ஆனது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள், சமீபத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்பியது. இது நிதி ரீதியாக பொறுப்பற்றது என்று விமர்சிக்கப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்புவதால் நிதி செலவு மிகப்பெரியதாக இருக்கும். இது தேசிய ஓய்வூதிய திட்டத்துடன் (NPS) ஒப்பிடும்போது ஓய்வூதிய பொறுப்புகளில் நான்கு மடங்கு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இந்த சூழலில்தான் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் மூலமாக, அரசு ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஒரு புதிய முன்னெடுப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் முக்கியமான மூலதன முதலீடுகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை பராமரிப்பதையும் இது உறுதி செய்கிறது. அரசாங்கத்தின் பங்களிப்பை அடிப்படை ஊதியத்தில் 18.5% ஆக அதிகரிப்பதன் மூலமும், ஊழியர்களின் பங்களிப்பை 10% ஆக பராமரிப்பதன் மூலமும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்திற்கும், ஓய்வூதிய நிதி ஈட்டுவதற்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புகிறது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள், தங்களுடைய நிதி நிலைத்தன்மையை பாதிக்காமல் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். மேலும், பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தும் என சொல்லப்படுகிறது. நாட்டின் நிதி ஆரோக்கியத்தை உறுதி செய்யும் அதே வேளையில் மில்லியன் கணக்கான அரசாங்க ஊழியர்களின் நிதி எதிர்காலத்தையும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பாதுகாக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.