உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா! முதலிடத்தில் பாகிஸ்தான்!

By ஆர்.தமிழ் செல்வன்

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால் 2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

2023-2025ம் ஆண்டிற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் போட்டி தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. ஆனால், இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. இதன் காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி 1 வெற்றி, ஒரு டிராவுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் 16 புள்ளிகளுடன் இந்திய அணி முன்னிலையில் இருந்தாலும், வெற்றி சதவீத அடிப்படையில் இந்தியா 66.67 சதவீதம் பெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிரான 1 டெஸ்ட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி 100 சதவீத வெற்றியுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 54.17 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து 29.17 வெற்றி சதவீதத்துடன் 4வது இடத்திலும் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE