மாணவர்களின் கொண்டாட்டங்கள் வரம்பு மீறி சென்றதால், பஸ் டே போன்றவைகளைக் கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களிடையே மீண்டும், தங்களுக்குள் ரூட் தல யார் என்கிற பிரச்னை தலையெடுக்க துவங்கியுள்ளது. சென்னையில், இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே மோதல் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நந்தனம் அரசு கல்லுாரியில் படிக்கும் ஸ்ரீகாந்த் என்ற மாணவர், நேற்று மாலை, பாரிமுனையிலிருந்து நங்கநல்லூர் செல்லும் பேருந்தில், பல்லவன் சாலை பணிமனை பேருந்து நிறுத்தத்தில் ஏறியுள்ளார். பேருந்து, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை எதிரில் நின்ற போது அங்கிருந்த புதுக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பேருந்தில் இருந்த ஸ்ரீகாந்தை, கீழே இறக்கி, நீ எந்த கல்லூரி என்று கேட்டு தாக்கியுள்ளனர்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு பேருந்தில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் வந்தனர். தங்கள் கல்லூரி மாணவரை சிலர் தாக்குவதை கண்டதும் அவர்கள் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இந்த மாணவர்களை தாக்கியுள்ளனர். இருதரப்பு மாணவர்களும் கடுமையாக மோதிக் கொண்டதை பார்த்த மற்ற பயணிகள் அச்சமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீஸார் மாணவர்களை விரட்டியடித்தனர். போலீஸாரை கண்டதும் அங்கிருந்து மாணவர்கள் தப்பி ஓடினர். தப்பியோடிய மாணவர்களை துரத்திச் சென்ற போலீஸார் மூன்று மாணவர்களை விரட்டி பிடித்தனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு அவர்கள் கண்டிக்கப்பட்டு, பின்னர் மூன்று மாணவர்களும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையின் பரபரப்பான அண்ணாசாலை பகுதியில் நடுரோட்டில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.