இன்று குழந்தைகள் தினம்; நேரு மாமாவின் பேரில் தேசத்தின் அரும்புகளைக் கொண்டாடுவோம்!

By காமதேனு

குழந்தைகள் தினம் என்ற பெயரில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை தேசம் கொண்டாடுவதன் பின்னணியில் பெருங்கனவு இருக்கிறது.

சுதந்திரப் போராட்ட வீரர், விடுதலை வேள்விக்காக உழைத்தவர்களை அரவணைத்து வழிகாட்டிய மாபெரும் தலைவர், மகாத்மா காந்தி மற்றும் அவரது கொள்கைகளின் பிரதான சீடர், பஞ்ச சீலம் மற்றும் அணி சேராமை என இந்தியாவின் தனித்துவ அடையாளங்களை வகுத்தவர், அடுத்த நூற்றாண்டின் தேச வளர்ச்சிக்காக அடித்தளமிட்டவர் என பண்டித நேருவின் அடையாளங்கள் ஏராளம்.

குழந்தைகள் தினம்

அவற்றில் முக்கியமான இன்னொன்று, குழந்தைகள் மீதான நேருவின் கொள்ளைப் பிரியம். வளர்ந்த மனிதனை வழிப்படுத்துவதை விட, குழந்தைப் பருவத்திலே அவர்களை முறையாக செதுக்குவதே புத்திசாலித்தனம் என்பதை நேரு உணர்ந்திருந்தார். நாடு என்னும் தோட்டத்தில் நாளை மலர்ந்து மணம் வீசக் காத்திருக்கும் இன்றைய அரும்புகளாக குழந்தைகளை அடையாளம் கண்டார். அவர்களின் நலனுக்காக நிறைய கனவுகளைக் கண்டார்.

சுதந்திர இந்தியாவில் நேரு கட்டமைத்த திட்டங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு பெற்றன. ஆற்றின் குறுக்கே அணைகள் முதல், சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்கள் வரை நேரு உருவாக்கியவை அனைத்தும், இன்றைக்கும் அவரது பெயரை உச்சரித்து வருகின்றன. அவற்றுக்கு ஈடு செய்ய முடியாது, அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கு பின்னர் நேருவின் அரசியல் எதிரிகள் என்று முளைத்து வந்தவர்களை நித்தம் கதறவும் வைக்கிறார்.

குழந்தைகளுடன் நேரு

அரசியலுக்கும் ஆட்சிக்கும் அப்பால், குழந்தைகளின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக தன்னை நேரு பாவித்ததே, அவரது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடக் காரணமானது. குழந்தைகளின் உரிமைகள், வளர்ப்பு, கல்வி, குழந்தைகள் நலனில் பெற்றோர், பள்ளி, சமூகம், நாடு ஆகியவற்றின் பங்கு உள்ளிட்டவை குறித்தெல்லாம் நிறைய எழுதியிருக்கிறார். அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவும் மெனக்கிட்டிருக்கிறார். சிறையில் இருந்தபோது மகள் இந்திரா பிரியதர்ஷினிக்காக அவர் எழுதிய கடிதங்கள் இன்னொரு ஆவணமாயின.

நேரு மாமா, சச்சா நேரு என்றெல்லாம் இந்தியாவின் எல்லா மூலையிலும் இந்தியக் குழந்தைகள் இன்றைக்கு தங்கள் முதல் பிரதமரை கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் வைத்து, இனிப்புகள் வழங்கி நாள் முழுக்க அவர்களை குதூகலிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

குழந்தைகளுடன் நேரு

ஜவஹர்லால் நேரு மறையும் வரை இதர உலக நாடுகளைப் போலவே, ஐநா காட்டிய வழியில் இந்தியாவும் குழந்தைகள் தினத்தை நவம்பர் 20 அன்று கொண்டாடி வந்தது. நேரு மறைந்த பிறகு அவருக்கான புகழஞ்சலியாக, அவர் கொண்டாடிய குழந்தைகளின் பெயரில் நேருவின் பிறந்த நாளை தேசம் கொண்டாட ஆரம்பித்தது.

எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும், இந்தியாவுக்கும், இந்தியாவின் குழந்தைகளுக்கும் நேரு நினைவில் இருப்பார். குழந்தைகளைக் கொண்டாடுவதும், அவர்களின் உரிமைகளை மதிப்பதும் நேருவுக்கான நிஜமான அஞ்சலியில் சேரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE