ஸ்வாதி மலிவாலை தாக்கிய வழக்கு: கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமாருக்கு ஜாமீன்!

By KU BUREAU

புதுடெல்லி: ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அனைத்து முக்கிய சாட்சிகளும் விசாரிக்கப்படும் வரை பிபப் குமார், முதல்வரின் தனிப்பட்ட செயலாளராக பதவியேற்கவும், முதல்வர் இல்லத்திற்குள் நுழையவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், சாட்சிகள் விசாரிக்கப்படும் வரை வழக்குக்கு தொடர்பாக பேசக்கூடாது என்று நீதிமன்றம் பிபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்வாதி மலிவால் வழக்கின் நடைமுறைகளை 3 வாரங்களுக்குள் முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பிபவ் குமாருக்கு எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் வழங்க தடை விதித்துள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மே மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் மே மாதம் 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.

இதன்பேரில், கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன்படி, மே 18ம் தேதி பிபவ் குமாரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE