அதிமுக மாநாட்டுக்கு அண்ணாமலையை அழைப்பீர்களா?

By இரா.மோகன்

அதிமுகவை தென்மாவட்டங்களில் கட்டி காப்பாற்றி வரும் மும்மூர்த்திகளில் முக்கிய மூர்த்தியாக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. தனது வேடிக்கையான பேச்சுக்களாலும் செயல்களாலும் எதிர்கட்சிகாரர்களையும் ரசிக்க வைப்பவர். “மதுரை மக்களின் பொழுது போக்கு மையமாக திகழ்பவர்” என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்திலேயே செல்லூராரை சிலாகித்ததையும் நாம் பாத்தோம்.

ஒரு பக்கம், கலகலப்பு அரசியல்வாதியாக சித்தரிக்கப்பட்டாலும் எந்தக் கட்சிக்காகவும் சொந்தக் கட்சியை விட்டுத்தராதவர் என பெயரெடுத்தவர் ராஜு. அப்படிப்பட்டவரிடம், மதுரை மாநாட்டு ஏற்பாடு எப்படி, அமலாக்கத்துறை ரெய்டு பற்றி, அண்ணாமலைக்கு அழைப்பு உண்டா... என கேள்விகளை அடுக்கினோம். அதற்கு செல்லூரார் தந்த சிறப்பான பதில்களில் இருந்து...

அதிமுக மதுரை மாநாடு அறிவிப்பு

மதுரையில் ஏற்பாடாகும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டு பணிகள் எப்படி போகிறது?

அதிமுகவின் வரலாற்றில் மதுரைக்கு என தனி இடம் உண்டு. அதிமுக தொடங்கப்பட்ட போது மதுரையில் எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் தூள் தூளாக்கி புரட்சித் தலைவர் வெற்றி வாகை சூடியது மதுரை மண். அதன் காரணமாகவே, அதிமுகவின் பொன் விழா மாநாட்டை மதுரையில் நடத்த பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாம் முடிவு செய்துள்ளனர்.

இந்த மாநாடு அறிவிக்கப்பட்டதுமே தென்மாவட்ட அதிமுகவினர் மத்தியில் உற்சாகம் கரைபுரள துவங்கி விட்டது. மாநாட்டுக்கான ஆரம்பக் கட்ட பணிகளை துவங்கிவிட்டோம். மாநாட்டு பந்தலின் நுழைவு வாயில் கோட்டை வடிவத்துடன் அமைய உள்ளது. மாநாட்டு அரங்கத்தில் அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாறு குறித்தும், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிமுக அரசு கொண்டு வந்த மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற உள்ளது. இந்த மாநாடு கட்சியின் திருப்புமுனை மாநாடாக அமையும்.

தென்மண்டல தலைநகராக விளங்கும் மதுரையில் நடைபெறும் மாநாட்டு பணிகளில் கொங்கு மண்டலத்தாரின் தலையீடு அதிகம் உள்ளதாகச் சொல்கிறார்களே..?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தம்பி. அதிமுகவின் எழுச்சி மாநாட்டை விமர்ச்சிப்பதற்காக சிலர் கிளப்பி விடும் வீண் புரளிதான் இது. சொந்த மாவட்டத்தில் உள்ள கட்சிக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் மற்ற மாவட்ட கட்சிகாரர்களும் அது போல செயல்பட முடியும். நாங்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களால் எப்படி சிறப்பாக பணியாற்ற முடியும். வேண்டாதவர்கள் செய்யும் சிண்டு முடியும் வேலைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் மாநாட்டு பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகிறோம்.

அண்ணாமலை - செல்லூர் ராஜூ

டெல்லியில் நடந்த என்டிஏ கூட்டத்தில் எடப்பாடியாரை மோடிக்கு அருகே உட்காரவைத்தார்கள். அதுபோல அதிமுக மாநாட்டுக்கு அண்ணாமலையை அழைப்பீர்களா?

அதுபற்றியெல்லாம் இப்போதைக்கு கூறமுடியாது. இது முழுக்க முழுக்க அண்ணா திமுக மாநாடு. இதில் பங்கேற்க யார் யாரை அழைக்க வேண்டும் என்பதை எல்லாம் கட்சியின் பொதுச்செயலாளரும் மூத்த தலைவர்களும் முடிவெடுப்பார்கள். இந்த மாநாடே மக்களவை தேர்தல் பிரச்சார மாநாடாகக்கூட இருக்கலாம். என்றாலும் அதெல்லாம் போகபோத்தான் தெரியும். அதையெல்லாம் கட்சி தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அமலாக்கத்துறையை வைத்து திமுகவை மிரட்டுகிறது பாஜக என்ற வாதத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

அமலாக்கத்துறை நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் சும்மா சொல்கிறார்கள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது கரூரில் பேசிய ஸ்டாலினும், கனிமொழியும் “செந்தில் பாலாஜி ஊழல்வாதி, அராஜகப் பேர்வழி, சர்வாதிகாரி, கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்” என்றார்கள். தற்போது அதே செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

திமுக எனும் புனித கட்சியில் சேர்ந்தவுடன் செந்தில் பாலாஜியும் புனிதராக மாறிவிட்டாரா? ஏற்கெனவே இவர்கள் கொடுத்த புகாரின் மீதுதான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி கடந்த 2 ஆண்டுகளில் அவர் செய்த ஊழல்கள் தொடர்பான நடவடிக்கையும் அடுத்தடுத்து வர உள்ளன. திமுகவினர் மீதான நடவடிக்கைகள் சிந்துபாத் கதை போல போய்க்கொண்டே இருக்கும்.

உண்மை இப்படியிருக்க, அமலாக்கத்துறை நடவடிக்கையை பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய அரசு மீது பழி போடுவது மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேடுவதற்காகத்தான். ஊர்ஜிதப்படுத்தப்பட்ட புகார்களின் மீதான நடவடிக்கைதான் இது. ஊழல் எனும் உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தே தீரவேண்டும். பள்ளிக்கூடம் செல்ல அழும் குழந்தை போல ஜெயிலுக்கு போக அடம்பிடித்த செந்தில் பாலாஜி தற்போது ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியில் ஊழல் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. துளியும் பயமின்றி கமிஷன், கரப்ஷனில் திமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கட்டமைத்திருக்கும் ‘இந்தியா’ கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு சவாலாக இருக்குமா?

பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை காரணத்தை தவிர அவர்களிடம் வேறேதும் குறிக்கோள் இல்லை. பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியாத ஊழல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அந்த கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத கட்சிகளே உள்ளன. அவர்களுக்குள்ளேயே பல முரண்பாடுகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் எதிரிகளாகவும், மற்றொரு மாநிலத்தில் நண்பர்களாகவும் செயல்படும் கொள்கை இல்லா கூட்டம் அது. ஆண்டிகள் கூடி கட்டிய மடமாக உள்ள இந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்திருப்பது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதற்குள் இந்த கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் பிய்த்துக் கொண்டு போகும் எனத் தெரியவில்லை. தொகுதி பங்கீடு, பொது வேட்பாளர் போன்றவற்றில் அவர்களிடையே முரண்பாடுகள் ஏற்படும் என்பது உறுதி. ஆகவே அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ‘இந்தியா’ கூட்டாணியால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

தேசிய அரசியலுக்குச் செல்லும் விதமாக, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

அப்படியெல்லாம் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை தம்பி. என்னை விட்டுடுங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE