கொல்கத்தா: பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை விவகாரத்தில், மூன்று டிவி சேனல் விவாதங்களுக்கு தனது செய்தித் தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த மூன்று சேனல்கள் " மேற்கு வங்கத்திற்கு எதிராக" பிரச்சாரம் செய்வதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏபிபி ஆனந்தா, ரிபப்ளிக் மற்றும் டிவி9 போன்ற ஊடக சேனல்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளது. அந்த சேனல்களின் தொடர்ச்சியான மேற்கு வங்க எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் மற்றும் உந்துதல் பிரச்சாரம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். நிகழ்ச்சிகளின் விவாதங்களின் அடிப்படையில், டெல்லி ஜமீன்தார்களை திருப்திப்படுத்தும் அவர்களின் நிர்பந்தத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அந்த சேனல்களின் விளம்பரதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அமலாக்கத்துறை வழக்குகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
எனவே, விவாதங்களின் போது இந்த சேனல்களின் மேடைகளில் திரிணமூல் கட்சி ஆதரவாளர்களாகவோ அல்லது அனுதாபிகளாகவோ சித்தரிக்கப்படும் நபர்களின் கருத்துக்களால் மேற்கு வங்க மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். ஏனெனில் அவர்கள் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை. எங்கள் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ‘ மேற்கு வங்க மக்கள் இந்த புனிதமற்ற வங்க எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து நிராகரித்துள்ளனர். எப்போதும் இத்தகைய பிரச்சாரத்தை தாண்டி உண்மையையே தேர்ந்தெடுத்துள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
» தென்னம்பாக்கம் அய்யனார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி உருவில் அழகு பொம்மை!
» சான் பிரான்சிஸ்கோவில் ‘வாழை’ திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்!
சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது திரிணமூல் மூத்த தலைவரும், எம்.பி-யுமான ககோலி கோஷ் தஸ்திதாருக்கும், பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பாலுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.