லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

By காமதேனு

மூணாறில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் ஒருவர் காலையில் வாங்கிய லாட்டரிக்கு மாலையில் ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

கேரளா மாநிலம், மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் (45). அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் விரதம் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநிக்கு பாதயாத்திரையாக சென்று வருவது இவரது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் பழநிக்கு மாலையிட்டிருந்த பரமசிவன் நேற்று முன்தினம் காலை மூணாறில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 245 பேர் கொண்ட குழுவுடன் பாதயாத்திரையாகப் புறப்பட்டார்.

அவருடன் மகன்கள் பரத், ரஞ்ஜித் ஆகியோரும் சென்றனர். போகும் வழியில் மூணாறில் இருந்து 3 கி.மீ தொலைவில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துள்ளனர். அப்போது அங்கு லாட்டரி விற்றவரிடம் கேரள அரசின் பிப்டி பிப்டி லாட்டரி டிக்கெட் ஒன்றை பரமசிவன் வாங்கினார்.

அதன் பிறகு பயணத்தை தொடர்ந்தவர்கள் 42 கி.மீ நடந்து மாலையில் மறையூரைச் சென்றடைந்தனர். அவர் வாங்கிய லாட்டரி அன்றைய தினம் குலுக்கல் என்பதால் மாலையில் வெளியான செய்தித்தாளை வாங்கி பரிசு ஏதாவது விழுந்து இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். அதில் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காலையில் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசு ஒரு கோடி ரூபாய் விழுந்ததை அறிந்தார்.

உடனடியாக அந்த லாட்டரி சீட்டைப் பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்தார். அதன்பின் பாதயாத்திரை தொடர்ந்தார். பழநி முருகன் அருளால் தனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளதாக கூறியுள்ள பரமசிவன், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது நெடுநாள் ஆசை, இந்தப் பரிசுத் தொகையில் வீடு கட்டப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE