வரும் 8-ம் தேதி ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்

By KU BUREAU

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 8-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் அயலகத் தலைவர் சாம் பிட்ரோடா, “மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதலாக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அவருடன் கலந்துரையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்தனர். அதன்பகுதியாக, தற்போது ராகுல் காந்தி செப்டம்பர் 8 – 10 தேதிகளில் அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார். கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்பத் துறையினர், அரசியல் தலைவர்கள் பல்வேறு தரப்புகளைச் சந்தித்து அவர் உரையாட உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக ராகுல் காந்தி கடந்த மே மாதம், மக்களவைத் தேர்தல் சமயத்தில் அமெரிக்காவுக்குச் சென்றார். ஆயிரக்கணக்கான இந்தியர்களைச் சந்தித்து, இந்தியாவின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE