திருவனந்தபுரம்: நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தின் சில கிராமங்கள், மனிதர்கள் என்றுமே குடியேற முடியாத அழிவு நிலைக்கு சென்றுவிட்டதாக கேரள அரசு கவலை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் காட்டாற்றுவெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காணாமல்போன 78 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரழிவில் இருந்து தப்பித்த பொதுமக்களில் பலர் தங்களது உறவினர்களையும், வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பரிதவிக்கின்றனர்.
பொதுமக்கள் தவிப்பு: மீட்புப்படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களிலும் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டவர்கள் நிலச்சரிவு சம்பவம் ஓய்ந்து ஒரு மாதகாலம் ஆன பிறகும் மீண்டும் தங்களது இருப்பிடத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், நிலச்சரிவால் சீர்குலைந்த புஞ்சிரிமட்டம், சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் மனிதர்கள் என்றுமே குடியேற முடியாத அழிவு நிலைக்குச் சென்றுவிட்டதாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். குறிப்பாக சம்பவத்தின்போது மேகவெடிப்பினால் அதிகனமழை பொழிந்து காயத்ரி நதி காட்டாறாகச் சீற்றம் அடைந்தது. இதனால் நதி பாய்ந்தோடும் வழி நெடுக உள்ள பாறைகள், சரளைக்கற்கள் உருண்டோடின. மரங்கள் பல வேறொரு பிடுங்கிக் கொண்டு ஆற்றோடு அடித்துச்செல்லப்பட்டதால் ஆற்றோட்டத்தை குறுக்கிட்ட வீடுகள், பள்ளிகள், கோயில்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அழிந்தன. இதனால் இந்த நிலப்பரப்பு நிரந்தரமாக உருமாறிவிட்டது என்றுஅதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
» தமிழ் வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு