புதுடெல்லி: ஹரியாணா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாநில சட்டசபைக்கு அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 4ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழா வருவதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஹரியானாவில் தேர்தல் நடக்கவுள்ள நாட்களில் தொடர் விடுமுறை வருவதால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் மோகன் லால் பரோலி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் வந்துவிட்டதால், தேர்தல் தேதி மாற்ற கோரிக்கை விடுப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதனையடுத்து, பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழா வருவதால், அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஹரியாணாவில் தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஹரியாணா மற்றும் ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
» பார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடக்கம்: புதிய அட்டவணை வெளியீடு!
» குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு: குண்டாறு அணையில் 41 மி.மீ மழை