‘இளவட்டம் வந்திருக்கேன்..’ -சாலையில் குதியாளம் போட்ட காட்டு யானைக்குட்டி

By காமதேனு

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போக்கு காட்டிய காட்டு யானைக்குட்டியால் சுவாரசிய பரபரப்பு எழுந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் அடிக்கடி சாலையோரம் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கேஎன்ஆர் முருகன் கோயில் அருகில் சாலையை கடக்க வந்த ஒற்றைக் காட்டு யானை, வனத்துறையினரை ஓடி வந்து மிரட்டுவது போல போக்கு காட்டத் தொடங்கியது.

சாலையில் குதியாளம்

யானைகளை கண்காணிக்கவும் சாலையில் வரும் வாகன ஓட்டிகளை பாதுகாக்கவும் என, வனத்துறையினர் நாள்தோறும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் யானைகளை யாரும் துன்புறுத்தாமலும், யானைகளிடம் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளாமலும் இருக்க, இவர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வேட்டை தடுப்பு காவலர்களை, திடீரென தரிசனம் தந்த இந்த ஒற்றை யானை மிரட்டியதோடு, வனப் பணியாளர்களின் கட்டளைக்கு பணியாது விளையாட்டு காட்டியது. அதே வேளையில் எவருக்கும் எந்த இடையூறும் தராது குதியாளம் போட்டபடி வனத்துக்குள் மறைந்து சென்றது. அதன் போக்கு முழுதும், இளவட்டத்தினர் மேற்கொள்ளும் கவன ஈர்ப்பு நடவடிக்கை போன்றே சுவாரசியமூட்டிச் சென்றன.

தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டு யானைகள் சாலையில் தென்படுவது வழக்கமாகி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும், யானைகள் இருக்கும் பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE