ஜோத்வாரா: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள டெல்லி - அஜ்மீர் எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையில் இருந்து, சர்வீஸ் சாலையில் கீழே விழுந்த கனரக டிரெயிலர் லாரி, டேங்கர் லாரியை நசுக்கியது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் உள்ள டெல்லி- அஜ்மீர் 200 அடி எக்ஸ்பிரஸ் சாலையில், மிக வேகமாக வந்த டிரெயிலர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது விழுந்து முற்றிலும் நசுங்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று மாலை 4.50 மணியளவில் நடந்த பயங்கர விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இந்த விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான டேங்கர் லாரியின் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், தலைமறைவான லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து குறித்து வைரலான வீடியோவில், எக்ஸ்பிரஸ் சாலையில் வந்து கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், டிவைடரைத் தாண்டி சர்வீஸ் சாலையில் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது 20 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. அதிர்ஷடவசமாக, டேங்கர் லாரியைத் தொடர்ந்து செல்லும் பைக், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இந்த விபத்தில் சிக்கவில்லை. அதுபோல நூலிழையில் இந்த விபத்திலிருந்து பல வாகனங்கள் தப்பிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
» தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமை - விழுப்புரத்தில் எளிய மக்கள் பரிதவிப்பு
» 'கையெழுத்து சரியில்லை' என 6 வயது சிறுமிக்கு ஸ்கேலால் அடி: டியூஷன் ஆசிரியை மீது வழக்கு