சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ: 3 ஆயிரம் பக்தர்களின் கதி?

By காமதேனு

சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு அடி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் வழிபடச் சென்றனர். அப்போது ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயால் மலையில் இருந்து கீழே இறங்கி வர முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம்,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டிற்காக ஜூலை 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கோயிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களைப் பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

இந்நிலையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நேற்று மாலை சதுரகிரி மலைக்கு செல்லும் பாதையான நாவல் ஊத்து பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களாக இப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் காட்டாறுகள், ஓடைகள் வறண்டு கிடந்தன. இதனால் செடி, கொடிகள் காய்ந்து இருந்தன. எனவே காட்டுத்தீயானது வேகமாக பரவியது.

இதனால் அமாவாசை தரிசனத்திற்காக சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி வர தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோயில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.

சாப்டூர் வனச்சரகர் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீத்தடுப்பு காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஆகியோர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனால் சதுரகிரி மலையில் பரபரப்பு நிலவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE