என்ஐடி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவர்கள் விடிய விடிய போராட்டம்; ஒப்பந்த பணியாளர் கைது

By KU BUREAU

திருச்சி: திருச்சி என்ஐடி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்தப் பணியாளர் கைது செய்யப்பட்டார். மாணவியை குற்றம்சாட்டி பேசிய விடுதி வார்டனைக் கண்டித்து, மாணவ, மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

திருச்சி திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன.

அவற்றில் இன்டர்நெட் வசதிக்காக கேபிள் வயர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பெண்கள் விடுதியில் வயர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளரான, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த கதிரேசன் (38) என்பவர், விடுதி அறையில் தனியாக இருந்தமாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக விடுதி வார்டன் பேபியிடம் முறையிட்டபோது, ‘‘நீஆடைகளை ஒழுங்காக அணிந்திருந்தால், இந்தப் பிரச்சினை ஏற்பட்டு இருக்காது’’ என்று கூறினாராம். இதைக் கண்டித்து மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கதிரேசனை கைது செய்தனர்.

இதற்கிடையில், வார்டனைக் கண்டித்து விடுதி முன்பு மாணவ, மாணவிகள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்தவளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டையும் முற்றுகையிட்டனர். அவர்களுடன் இயக்குநர் அகிலா மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

தொடர்ந்து, விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி நேற்று காலை திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடுவதற்காக மாணவர்கள் புறப்பட்டனர். இதையடுத்து, என்ஐடி நுழைவாயில் கதவு மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நுழைவுவாயில் அருகே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் எஸ்.பி. வருண்குமார், கோட்டாட்சியர் அருள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவ, மாணவிகளிடம் விடுதி வார்டன் பேபி மன்னிப்புக் கோரியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கதிரேசன்

பாதுகாப்பு குறைபாடு: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் கூறும்போது, "மகளிர் விடுதியில் ஆண் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடும்போது, விடுதி வார்டன் உடனிருக்க வேண்டும். என்ஐடி நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. விடுதி வார்டன் மீதுபுகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

என்ஐடி நிர்வாகம் வருத்தம்: இது தொடர்பாக என்ஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விடுதியில் மாணவிக்கு நேரிட்ட பாலியல் சீண்டல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது. வருங்காலங்களில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனிசாமி கண்டனம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி் வெளியிட்ட அறிக்கையில், "பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்கச் சென்றவர்களை காவல் நிலையத்தில் இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நேரிடா வகையில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துஉள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE