பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்: பிரதமருக்கு மம்தா மீண்டும் கடிதம்

By KU BUREAU

கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தா பெண் பயிற்சிமருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கவேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யிருந்தார். இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பிரச்சினை குறித்த எனது கடிதத்துக்கு நீங்கள் பதில் அனுப்பாதது ஏன்?அதேநேரத்தில், கடிதம் கிடைத்துள்ளதாக மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் எனக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தில் மேற்கு வங்க அரசு திருத்தம் செய்ய உள்ளது. இது அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்மூலம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும்.

அதைப் போலவே, பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் மத்திய சட்டத்தை, பாஜக தலைமையிலான அரசு கொண்டு வரவேண்டும்.

மாநில அரசு நிதியில் மேற்குவங்கத்தில் 88 விரைவு சிறப்புநீதிமன்றங்களும், 62 போக்சோவழக்கு தொடர்பான நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த நீதிமன்றங்கள் இயங்கவே இல்லை எனமத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்னா தேவி தெரிவித்துள்ளார். இது சரியல்ல. இவ்வாறு மம்தா குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE