ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் இன்று தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன், பாஜக தலைவர்கள் பாபுலால் மராண்டி, சிவராஜ் சிங் சவுகான், ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பிறகு அந்த விழாவில் பேசிய சம்பாய் சோரன், “நான் அவமானபடுத்தப்பட்டேன், அதனால்தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். இருப்பினும், ஜார்க்கண்ட் மக்களின் அன்பு மற்றும் ஆதரவின் காரணமாக, நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதில்லை என முடிவு செய்தேன். ‘ஜார்க்கண்ட் அந்தோலன்’ காலத்தில் நடந்த போராட்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.
நான் ஒரு புதிய கட்சியை தொடங்குவேன் அல்லது வேறு கட்சியில் சேருவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் அவமானப் படுத்தப்பட்ட அந்த கட்சியில் நான் ஒருபோதும் இருக்க கூடாது என முடிவு செய்தேன். இதன் பின்னர், ஜார்க்கண்ட் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய பாஜகவில் சேரவும் முடிவு செய்தேன்" என்று அவர் கூறினார்.
» பிரதமர் மோடியையும் என்னையும் பிரிக்கவே முடியாது: மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் உறுதி
» வேம்பார் கடல் பகுதியில் சிலிண்டர் உதவியுடன் சூறையாடப்படும் கணவாய் மீன்கள்!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனர் ஷிபு சோரனுக்கு நெருக்கமானவராக இருந்த சம்பாய் சோரன், ஜேஎம்எம் கட்சியில் இருந்து புதன்கிழமை விலகினார். அவர் ஷிபு சோரனுக்கு எழுதிய கடிதத்தில், "எனக்கு குடும்பம் போன்ற ஜேஎம்எம் கட்சியிலிருந்து நான் விலகுவேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுக்க தூண்டப்பட்டேன். ஜேஎம்எம் கட்சி அதன் கொள்கையில் இருந்து விலகி விட்டது” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
சம்பாய் சோரன் இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் 12 வது முதல்வராக பதவியேற்றார். ஜூலை 4 அன்று ஜார்க்கண்டின் 13வது முதலமைச்சராக ஜேஎம்எம் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜூலை 3 அன்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.