ஐசிசி தலைவரான ஜெய் ஷா... அமித் ஷாவுக்கு வாழ்த்து சொல்லி பரபரப்பை கிளப்பிய மம்தா!

By KU BUREAU

கொல்கத்தா: ‘உங்கள் மகன் அரசியல்வாதியாகவில்லை. ஆனால் மிக மிக முக்கியமான ஐசிசி சேர்மன் ஆகி விட்டார். உண்மையில் அவரது இந்த சாதனைக்காக உங்களை நான் வாழ்த்துகிறேன்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

35 வயதான ஜெய் ஷா, கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்து வருகிறார். ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதையடுத்து அவர், போட்டியின்றி ஐசிசி-யின் தலைவராக தேர்வானார். வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜெய் ஷா பொறுப்பெற்று கொள்கிறார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மத்திய உள்துறை அமைச்சருக்கு வாழ்த்துக்கள். உங்கள் மகன் அரசியல்வாதியாகவில்லை; பல அரசியல்வாதிகள் வகிப்பதை காட்டிலும், மிக மிக முக்கியமான ஐசிசி சேர்மன் ஆகி விட்டார். உங்கள் மகன் உண்மையிலேயே மிகவும் சக்திவாய்ந்தவராகி விட்டார். உண்மையில் அவரது இந்த சாதனைக்காக உங்களை நான் வாழ்த்துகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மம்தா வாழ்த்து சொன்ன விவகாரம் இப்போது பேசுபொருளாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE