21ம் தேதி முதல் மீண்டும் போராட்டம் தொடரும்: 4வது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயிகள் அறிவிப்பு!

By காமதேனு

"தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும்" என, 4வது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு, விவசாயிகள் சங்கத்தினர் 4வது சுற்று பேச்சுவார்த்தை

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கிப் பேரணி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் கடந்த 13ம் தேதி தொடங்கினர். இந்நிலையில் பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லைப் பகுதியான அம்பாலா மாவட்டம், ஷம்பு பகுதியில் விவசாயிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 3 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ்கோயல், உள் துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேற்று 4வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும் பங்கேற்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு, 'பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ்' கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் கூறுகையில், “அடுத்த 2 நாள்களில் அரசு எங்களிடம் தெரிவித்த முன்மொழிவு குறித்து விவாதிப்போம். டெல்லிக்கு திரும்பிய பிறகு எங்களது மற்ற கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். எந்த தீர்வும் ஏற்படாவிட்டால் வரும் 21ம் தேதி முதல் மீண்டும் 'டெல்லி சலோ' பேரணியை தொடருவோம்" என்றார்.

இதேபோல், சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் கூறுகையில், “பருப்பு வகைகள், மக்காச்சோளம் ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகள் குறித்து எங்கள் சங்கத்தினர், நிபுணர்களுடன் விவாதிப்போம். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் (டெல்லி சலோ) தொடரும். வேறு பல கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE