லக்னோ: உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் இரண்டு மாதங்களில் 8 பேரைக் கொன்ற ஓநாய் பிடிபட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
பஹ்ரைச்சில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த ஓநாய் தாக்குதல்களில் இதுவரை ஏழு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட எட்டு பேர் இறந்துள்ளனர். கடைசியாக செவ்வாய்க்கிழமை இரவு நடந்த ஓநாய் தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டது.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை பயன்படுத்தி குறிப்பிட்ட பாதைக்கு வலுக்கட்டாயமாக விரட்டியதில் 6 ஓநாய்களை கொண்ட கூட்டத்திலிருந்து ஒரு ஓநாய் சிக்கியது. பின்னர் அதை அமைதிப்படுத்தி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். வனத்துறை அதிகாரிகள் இதுவரை நான்கு ஓநாய்களை பிடித்துள்ளனர். மேலும், இரண்டு ஓநாய்கள் இன்னும் வெளியில் நடமாடி வருகின்றன.
உத்தரபிரதேச அரசு பஹ்ரைச்சில் உள்ள மெஹ்சி தெஹ்சில் பகுதியில் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க 'ஆபரேஷன் பேடியா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த நடவடிக்கையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். ஓநாய்களைப் பிடிக்க 16 குழுக்களை அனுப்பியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓநாய்களைப் பிடிக்க வனத்துறையினரால் ட்ரோன் கேமராக்கள் மற்றும் தெர்மல் ட்ரோன் மேப்பிங் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
» உதகையில் போட்டி நகர்மன்றக் கூட்டம் நடத்திய அதிமுக கவுன்சிலர்கள்!
» நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி: குன்னூரில் அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!
தாக்குதல் நடந்தபோது யானைகளின் சாணம் மற்றும் சிறுநீரை அதிகாரிகள் ஓநாய்களின் வழியைத் திசைதிருப்ப பயன்படுத்தினர். ஓநாய்கள் யானைகளை கண்டு பயப்படும் குணம் உடையது. எனவே மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகளின் சாணம் தீ வைக்கப்படுவதால், அந்த வாசனையால் ஓநாய்கள் அப்பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்லும். அதுபோன்ற பகுதிகளில் தூண்டில் மூலம் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணி கூறுகையில், “கதவுகள் இல்லாத வீடுகளுக்கு கதவுகள் பொருத்தப்பட்டு, அனைத்து கிராமங்களிலும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியும் ஆஷா பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.