அலட்சிய சிகிச்சை; அரசு மருத்துவமனைகளுக்கு என்ன தான் ஆச்சு?

By இரா.மோகன்

அடித்தட்டு மக்களின் ஆபத்துதவிகளாக இருக்கும் அரசு மருத்துவமனைகளை நோக்கி அண்மைக்காலமாக வந்து விழும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரம் அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்!

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

கடலூரை அடுத்துள்ள கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது 13 வயது மகள், சளி தொந்தரவால் அவதிப்பட்டிருக்கிறார். கூலி தொழிலாளியான கருணாகரன், மகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியில்லாததால் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே அந்தச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், சளிக்கான மருந்துகளை வழங்க சீட்டு எழுதி கொடுத்திருக்கிறார்.

ஆனால், ஊசிபோடும் இடத்தில் இருந்த செவிலியர் அந்தச் சீட்டில் எழுதி இருந்ததை சரியாகப் பார்க்காமலேயே ஒன்றுக்கு இரண்டாக ஊசிகளைப் போட்டுள்ளார். ”சீட்டைப் பார்க்காமலே ஊசி போடுறீங்களே?” என்று கருணாகரன் கேட்டதற்கு அந்த செவிலியர் சொன்ன பதில் அதிர்ச்சி ரகம். ’’நாய் கடிக்கு ரெண்டு ஊசிதான் போடுவோம்” என்று அவர் சொன்ன பதிலால் அரண்டு போனார் கருணாகரன்.

“எனது மகளுக்கு சளிக்குத்தானே வைத்தியம் பார்க்க வந்தேன்” என கருணாகரன் பதற, “தெரியாமல் நடந்துருச்சு... மன்னிச்சுக்குங்க” என்று கூலாக சொல்லி இருக்கிறார் செவிலியர். அதற்குள்ளாக, கருணாகரனின் மகள் மயங்கிச் சரிய, உடனடியாக அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக் கிறார். இந்த விவகாரம் போலீஸ்வரை போனதை அடுத்து, பணியில் அலட்சியமாக இருந்த அந்த செவிலியரை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையால் பச்சிளம் குழந்தைக்கு கை அகற்றப்பட்டதாக அடுத்த புகார் வெடித்துவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர்-அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை முகம்மது மகரின். தலையில் நீர் கோத்திருந்த அந்தக் குழந்தையை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள். அங்கே அந்தக் குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் போடப்பட்ட நிலையில் அந்த இடம் கருப்பாக நிறம் மாறி செயல் இழந்துள்ளது.

இதனையடுத்து ஜூலை 2-ம் தேதி, அந்த குழந்தையின் செயல் இழந்த கை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அகற்றப்பட்டது. குழந்தைக்கு மூளை தொற்று இருந்தது. அதனால் தான் கையில் செயலிழப்பு ஏற்பட்டது. கையை அகற்றாவிட்டால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என்பதால் உடனடியாக கை அகற்றப்பட்டது” என ராஜீவ் காந்தி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் பெற்றோர் இதை ஏற்கவில்லை. மருத்துவரின் அலட்சிய சிகிச்சையால் தான் குழந்தைக்கு கையை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்கள்.

இதையடுத்து, “இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி தவறு நேர்ந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக விசாரணைக்குழு அளித்த அறிக்கையில், “குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் நிகழவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கையின் முடிவுகளையும் ஏற்க மறுத்த குழந்தையின் பெற்றோர் அமைச்சர் மீதும் அதிருப்தி தெரிவித்தார்கள். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்டப் போராட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.

அஜிஸா

கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் அஜிஸாவிடம் பேசினோம். ‘’எழும்பூர் மருத்துவமனை டாக்டர்கள், குழந்தைக்கு இதய பாதிப்பு எதுவும் இல்லைன்னும் ஆரோக்கியமா இருக்குன்னும் சொன்னாங்க. ஆனா விசாரணை அறிக்கையில், இதய பாதிப்பு இருக்குன்னு சொல்றாங்க. ஜூன் 29-ம் தேதியே குழந்தையோட கை நிறம் மாற்றமா இருக்குன்னு சொன்னேன். ஆனா, டாக்டரோ, நர்ஸோ யாரும் என் குழந்தையை வந்து பார்க்கல. இப்ப இவங்க வெளியிட்டிருக்கிற அறிக்கையில எங்களுக்கு திருப்தியில்லை. எனவே முழு அறிக்கையையும் வாங்கி பார்த்துவிட்டு அடுத்து செய்வது என முடிவெடுப்போம். எங்களுக்கு இழப்பீட்டு நிதி தேவையில்லை; நீதிதான் வேண்டும்’’ என்றார் அவர்.

உண்மையில், உயிரைக் காக்கும் இடத்தில் இருக்கும் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் பணியில் அலட்சியம் காட்டுவதால் தான் இதெல்லாம் நடக்கிறதா என்ற கேள்வியுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவர் சங்க தலைவர் ஆர். மலையரசுவிடம் பேசினோம்.

‘’மருத்துவர்களோ, மருத்துவப் பணியாளர்களோ தவறு நிகழ வேண்டும் என்ற நினைப்புடன் பணியாற்றுவதில்லை. நோயின் தன்மை, அதன் வீரியம், மற்றும் வளரும் வேகம் ஆகியவை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே வருகின்றன. மருத்துவ வளர்ச்சி ஒருபுறம் ஏற்பட்டாலும் மறுபுறம் புதுப்புது நோய்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு நோயின் தன்மை. அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து மருத்துவர் என்ற அடிப்படையில் எங்களுக்கு தெரியும். ஆனால், பாதிக்கப் பட்டவர்களுக்கு அது குறித்து தெரியாததால், நாங்கள் சொல்வதை ஏற்க மறுக்கின்றனர்.

சிகிச்சையில் இருக்கும் குழந்தையை பார்வையிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பல்லுக்குச் சிகிச்சை எடுக்கும் போதுகூட இதய அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. முன்பெல்லாம், குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. இன்றைக்கு அது வெகுவாக குறைந்து விட்டது. அந்த அளவுக்கு மருத்துவம் வளர்ந்துள்ளது. ஆனால், அதற்கு இணையாக புதுப்புது நோய்களும் வளர்ந்து வருகிறது. பணிச்சுமை என்பது மருத்துவர்களுக்கு இருப்பதை மறுக்க முடியாது. அதற்காக பணிச்சுமையால்தான் சிகிச்சையில் கவனக் குறைவு ஏற்படுவதாக சொல்வதை ஏற்க முடியாது’’ என்றார் அவர்.

அரசு மருத்துவமனைகள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் போன்ற பணியாளர்களைத் தவிர மற்ற பணிகளில் குறைவான சம்பளத்தில் ஒப்பந்தப் பணியாளர்களே ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களே காயங்களுக்கு டிரெஸ்ஸிங் செய்பவராக, தையல் போடுபவராக, மருந்து வழங்குபவர்களாக காலப்போக்கில் மாறிவிடுகிறார்கள். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்கள் இல்லாததும், பணிச்சுமை அதிகரித்து வருவதும் இதுபோன்ற அலட்சியங் களுக்கு காரணமாகிவிடுவதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனைகளுக்கு தாராளமாக நிதியை ஒதுக்குகிறது அரசு. இன்றைய சூழலில், தனியார் மருத்துவ மனைகளுக்கு நிகரான அடிப்படைக் கட்டமைப்புகள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களின் அரசு மருத்துவமனைகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும், ‘அரசு மருத்துவமனைகளில் அலட்சிய சிகிச்சை’ என்ற பழி விழுவது ஏன் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்; இனியாவது இத்தகைய அவச்சொல் அரசு மருத்துவ மனைகளுக்கும் அதன் மருத்துவர்களுக்கும் வாராது இருக்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE