மேற்கு வங்க பந்த்: பாஜக - டிஎம்சி தொண்டர்கள் மோதல் : பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். இந்நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்கம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மேற்கு வங்க பாஜக அறிவித்தது.
பாஜக அழைப்பு விடுத்திருந்த 12 மணி நேர பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் புதன்கிழமை இயல்பு வாழ்க்கை ஓரளவு முடங்கியது. நாடியாவில் திரிணமூல் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வற்புறுத்தல் என பாஜகவினர் பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்த முயற்சி செய்தனர்.
பந்த் காரணமாக தலைநகர் கொல்கத்தாவில் வழக்கமான வார நாட்களை ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே பேருந்துகள், வாடகை வாகனங்கள் ஓடின. மாநிலத் தலைநகரில் கடைகளை மூட வலியுறுத்திய பாஜக தொண்டர்கள் பலரையும் போலீஸார் கைது செய்தனர். வடக்குப் பகுதியில் மாநில அரசின் வடக்கு பெங்கால் மாநில போக்குவரத்துக்கு கழகப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்குவதைக் காண முடிந்தது.
‘பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு’ - பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், தங்கள் அரசு நிறைவேற்றி அனுப்பும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தர மாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
» வெளிமாநிலம், வெளிநாட்டினரின் குற்றப் பின்னணியை அறிய உதவும் ‘ஸ்மாக்’ தொழில்நுட்பம்!
» வீட்டுமனையை அளந்து கொடுக்க ரூ.4,500 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது @ விழுப்புரம்
“தேசமே விழித்தெழு!” - குடியரசுத் தலைவர் அறைகூவல்: “பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசமே விழித்தெழ வேண்டிய நேரம் இது” என்று கொல்கத்தா சம்பவத்தை முன்வைத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழுத்தமாக அறைகூவல் விடுத்துள்ளார்.
ஜன்தன் திட்டம் 10-ம் ஆண்டு: பிரதமர் மோடி பெருமிதம்: ஜன்தன் யோஜனா தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் 53 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொடரும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்: குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
150 புதிய விரைவுப் பேருந்துகள்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: ED - அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், எம்பியுமான ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகளின்படி, ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சித்திக் மீது கேரள போலீஸ் வழக்குப் பதிவு: நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் மூத்த நடிகரும், ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளருமான சித்திக் மீது திருவனந்தபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“தஞ்சை, சென்னையில் அருங்காட்சியகங்கள்” - தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர தின அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மீது அன்பில் மகேஸ் அதிருப்தி: புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். மேலும், ‘மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படாததால் 15,000 ஆசிரியர்களின் ஊதியம் கூட நிறுத்தப்படக் கூடிய நிலை ஏற்படும்’ என்றார். அதேவேளையில், “தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை பெற மத்திய அரசின் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
இதற்கிடையே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. அதேநேரம், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு உட்பட சில கோரிக்கைகளை தமிழகம் முன்வைத்தது. ஆனால், அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் இந்த திட்டத்தில் தமிழகம் சேரவில்லை. இதனால் கடந்த கல்வியாண்டில் 4-வது தவணை நிதியுதவியும், நடப்பு கல்வியாண்டில் முதல் தவணை நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
இதனால் மாநில அரசின் பங்களிப்பை கொண்டு தற்போது திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நீண்ட காலத்துக்கு இதை கொண்டு சமாளிக்க முடியாது. எனவே பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதவிர பாமக, காங்கிரஸ்மற்றும் கல்வியாளர்கள், ஆசிரியர்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் நிதியை விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.