ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பய் சோரன் 30-ம் தேதி பாஜகவில் இணைகிறார்

By KU BUREAU

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பய்சோரன் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுவது போன்ற புகைப்படத்தை, ஜார்க்கண்ட் மாநில பாஜக பொறுப்பாளரும் அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், “ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஆதிவாசி தலைவர்களில் ஒருவருமான சம்பய் சோரன் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்துப் பேசினார். வரும் 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சம்பய் சோரன் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பதவி விலகியதால், அக்கட்சியின் மூத்த தலைவர் சம்பய் சோரன் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல்வரானார்.

இந்நிலையில், ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையானார். கடந்த ஜூன் 28-ம் தேதி சம்பய் சோரன் பதவி விலகினார். ஹேமந்த் முதல்வரானார். இதனால் சம்பய் சோரன் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கட்சியில் தன்னை ஓரம்கட்டுவதாக கடந்த 18-ம் தேதி சம்பய் சோரன் வெளிப்படையாக தெரிவித்தார். அத்துடன் தனது ஆதரவாளர்களுடன் அவர் டெல்லி சென்றிருந்தார். அப்போதே அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி வந்துள்ளாதாக சம்பய் சோரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE