மூன்றடுக்கு பாதுகாப்பு, 6,000 போலீஸார்: பேரணி அறிவிப்பால் உச்சகட்ட பாதுகாப்பில் கொல்கத்தா

By KU BUREAU

கொல்கத்தா: ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் கொலைக்குப் பொறுப்பேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ‘நபன்னா அபிஜான்’ பேரணியில் வன்முறை நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் போலீஸார் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க 6,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நபான்னா என்பது மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலகமாகும். இங்கிருந்து தான் முதல்வர் அலுவலகம் உட்பட பல முக்கிய அமைச்சரவை அலுவலகம் செயல்படுகிறது. கொல்கத்தா பெண் மருத்துவர் பெண் கொலைக்குப் பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர் அமைப்பு ஒன்று செவ்வாய்க் கிழமை (ஆக.27) ஹவுராவில் உள்ள மேற்கு வங்க தலைமைச் செயலக அலுவலகம் அமைந்துள்ள நபன்னா நோக்கி பேரணி செல்வதாக அறிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் அமைந்துள்ள வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19 இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு, 5 முக்கிய இடங்களில் அலுமினியம் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீவிர கண்காணிப்பு: சட்ட ஒழுங்கை பராமரிக்க 6,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் 26 துணை கமிஷனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹாஸ்டிங்ஸ், ஷிப்பூர் சாலை, ஹவுரா மேம்பாலம், ஹூக்ளி மேம்பாலம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நபன்னா அபிஜான் பேரணியில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள். அவர்களின் பெயர்கள், பேரணியில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் யார்? போன்ற தகவல் கோரி பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு காவல்துறை விரிவான இமெயில் அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை மாலை மேற்கு வங்க போலீஸ், இந்தப் பேரணிக்கு அனுமதியில்லை இது சட்டவிரோதமானது என்று கூறியது. இந்நிலையில் இப் பேரணியில் வன்முறையை உருவாக்க சதி இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரவித்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உளவுத் துறை தகவலின்படி, இன்று கொல்கத்தாவில் கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஒரு பேரணியும், ஹவுராவின் சந்த்ராகச்சியில் இருந்து ஒரு பேரணியும் நடைபெறவிருக்கிறது. இந்தப் பேரணிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தொடங்க இருக்கிறது. கல்லூரி சதுக்கத்தில் இருந்து நபானா 10 கிலோ மீட்டர் தொலைவு. சந்த்ராங்கச்சியில் இருந்து 3 கி.மீ., தூரம். எனவே, இந்த இரு மார்க்கங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் vs பாஜக மோதல்: இதனிடையே இந்தப் பேரணி குறித்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி குற்றம் சாட்டியுள்ளன. செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்த ‘நபன்னா அபிஜான் ’ பேரணிக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளதாகவும், போரட்டத்தின் போது வன்முறையைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் சந்ரிமா பட்டாச்சாரியா மற்றும் குணால் கோஸ் வீடியோக்களைக் காட்டி, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீஸ்காரர்களைத் தூண்ட பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

சந்ரிமா கூறுகையில், "இந்த ஒட்டுமொத்த விவகாரமும் உச்சநீதிமன்றத்தின் முன்பு உள்ளது. நபன்னா அபிஜான் பேரணிக்கு போலீஸ் அனுமதி பெறப்படவில்லை. எந்த வகையான ஊர்வலம் மற்றும் பேரணிக்கும் போலீஸ் அனுமதி அவசியம். ஆனால் யாரும் போலீஸாரை அணுகவில்லை. இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகி விட்டது. அவர்கள் மாணவர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டுள்ளார்கள். நபன்னாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனுமதியுடன் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்திக்கொள்ளலாம், ஆனால், போராட்டம் என்ற பெயரில் அராஜகங்களை அனுமதிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் (சுவேந்து அதிகாரி) ஏற்கனவே ஆகஸ்ட் 27-ம் தேதி தோட்டாக்கள் முழங்கும் என்று தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.

பாஜக பதிலடி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, இந்தப்பேரணி பாரதிய ஜனதா கட்சியால் ஏற்பாடு செய்யப்படவில்லை, என்றாலும் பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த ராகுல் சின்ஹா கூறுகையில், "பாஜக இந்தப் பேரணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அட்டூழியங்களுக்கு எதிராக பேசும் யார் ஒருவரையும் நாங்கள் ஆதரிக்கிறோம். மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்புவது எங்களுக்கு புரிகிறது. இது வெகுஜனமக்களின் பிரச்சினை" என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா பாலியல் வன்கொடுமைக் கொலை: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை2-ம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE