சண்டிகர்: பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம்,தாரிவால் பகுதியை சேர்ந்த சிங்புரா கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் மாசிஹ் (30). தினக்கூலி தொழிலாளியான இவர் வலிப்பு நோயால் பாதிக் கப்பட்டிருந்தார்.
இதனால் சாமுவேலுக்காக பிரார்த்தனை செய்வதற்காக ஜேக்கப் மாசிஹ் என்ற உள்ளூர் மதபோதகரை சாமுவேலின் குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை தங்கள் வீட்டுக்கு அழைத்திருந்தனர். இந்நிலையில் பிரார்த்தனைக்கு பிறகு சாமுவேலின் உடலில் இருந்து பேயை விரட்டுவதாக கூறி அவரை ஜேக்கப்பும் அவருடன் வந்தவர்களும் தாக்கியுள்ளனர். இதனால் சாமுவேலுக்கு எதுவும் நேராது என ஜேக்கப் உறுதி கூறியிருந்தார்.
ஆனால் கடுமையாக தாக்கப்பட்டதில் சாமுவேல் சுருண்டுவிழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அவரது குடும்பத்தினர் மறுநாள் அடக்கம் செய்தனர். 2 நாட்களுக்கு பிறகு சாமுவேலின் மனைவியும் தாயாரும் மதபோதகர் ஜேக்கப்புக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை மாஜிஸ்திரேட் இந்தர்ஜித் குமார் முன்னிலையில் சாமுவேலின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மத போதகர் ஜேக்கப் மற்றும் 8 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
» பாகிஸ்தானில் பேருந்துகளில் இருந்து பயணிகளை இறக்கி அடையாளம் பார்த்து 23 பேர் சுட்டுக்கொலை
» ரஜினி Vs துரைமுருகன் சலசலப்பு முதல் ஹிஸ்புல்லா - இஸ்ரேல் மோதல் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்