ஊழல் செய்வதில்தான் முன்மாதிரி முதல்வராக இருக்கிறார்; ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு!

By காமதேனு

இந்தியாவிலேயே முன்மாதிரி முதல்வராக திகழ்வதாக கூறிக்கொள்ளும் ஸ்டாலின், ஊழல் செய்வதில்தான் முன்மாதிரி முதல்வராக திகழ்கிறார் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் சாரைப்பட்டியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களுக்கு எல்லாம் முன் மாதிரி முதல்வராக திகழ்வதாக தனக்கு தானே கூறிக்கொள்கிறார். உண்மையில் லஞ்சம் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும்தான் முன்மாதிரி முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின்.

இதற்கு உதாரணமாக செந்தில் பாலாஜி மீதான புகார்களை கூறலாம். ஒரு சிறைக் கைதியை தனது அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்கிறார் ஸ்டாலின். இது இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று. கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆலடி அருணா மீது புகார் எழுந்த போது அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதே போல் என்.கே.பி.ராஜா மீது புகார் எழுந்த போது அவரும் நீக்கப்பட்டார். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது குற்றச்சாட்டு எழுந்த போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

ஆனால் ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யாமல், அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்து பாதுகாத்து வருகிறார் ஸ்டாலின். இது இந்தியாவில் எங்குமே இல்லாதது’’ என காட்டமாக பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE