மனப்புழுக்கத்தில் இருக்கிறார்களா மதிமுக மக்கள் பிரதிநிதிகள்?

By இரா.மோகன்

வைகோவின் வாரிசு அரசியலை எதிர்த்து கட்சிக்குள் எழுந்த சலசலப்பு கொஞ்சம் அடங்கி இருக்கும் நிலையில், மதிமுக மக்கள் பிரதிநிதிகளில் சிலர். ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்தும் தங்களால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தைக் கொட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ-வான புதூர் பூமிநாதன், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என அறிவித்ததும், காரைக்குடி நகராட்சி மதிமுக கவுன்சிலரான மனோகரன் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்திருப்பதும் இதன் வெளிப்பாடு தான் என்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மதிமுக மக்கள் பிரதிநிதிகள் இப்படி மனப்புழுக்கத்தை கொட்டி வருவது திமுக கூட்டணிக்குள்ளும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

மதிமுக தொடங்கியதில் இருந்தே வைகோவுடன் பயணித்து வரும் புதூர் பூமிநாதனுக்கு கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் எம்எல்ஏ ஆகும் வாய்ப்பே அமைந்தது. அப்படி காத்திருந்து பெற்ற பதவியை உதறித் தள்ளும் முடிவை கனநேரத்தில் அவர் எடுத்திருக்க மாட்டார். மக்கள் பிரதிநிதியாக தன்னால் எதையும் செய்யமுடியவில்லையே என்று அவர் மனதுக்குள் இருந்த தொடர் அழுத்தம் தான் இப்படி வார்த்தைகளாக வெடித்திருக்கிறது.

தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பதவிக்கு வந்ததாகவும், ஆனால் அப்படி எதுவும் செய்ய முடியாத நிலையில் தற்போது இருப்பதாகவும் மனம் குமுறிய பூமிநாதன், ”இதனால் தொகுதிக்குள்ளேயே தலைகாட்ட முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று வேதனையில் வெதும்பி இருக்கிறார்.

பூமிநாதனை இப்படி குமுற வைத்ததின் பின்னணியில் அதிகாரிகளும், ஆளும் கட்சியினர் சிலரும் இருப்பதாகச் சொல்கிறார்கள். மதுரையின் அரசு அதிகாரிகள் பூமிநாதனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று சொல்பவர்கள், “அவரது பேச்சு எங்கும் எடுபடுவதில்லை. மதிமுக எம்எல்ஏ தானே என்ற அதிகாரிகளின் அலட்சியத்துக்கு ஆளும்கட்சி பிரதிநிதிகள் சிலரும் தோள் சேர்க்கிறார்கள். அதனாலேயே பூமிநாதனின் கோரிக்கைகள் ஏதும் கவனிக்கப்படுவதில்லை” என்கிறார்கள்.

ஆளும் கட்சி அமைச்சர்களிடம் தனது வருத்தத்தை பூமிநாதன் பலமுறை எடுத்துச் சொல்லியும் பயனில்லை. வேறுவழியின்றி, வைகோவின் கவனத்துக்கே இந்த விஷயத்தை நிர்வாகிகள் மூலம் கொண்டு சென்றிருக்கிறார். அவராலும் பூமிநாதனின் புழுக்கத்தைப் போக்க வழிசொல்லமுடியவில்லை.

இந்த நிலையில், யாரையும் கலக்காமல், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பூமிநாதன் அறிவித்தது மதிமுக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த வைகோவும், துரை வைகோவும் உடனடியாக பூமிநாதனை தொடர்புகொண்டு பேசி அவரை சமாதானம் செய்திருக் கிறார்கள். அப்போதும் அவர்களிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார் பூமி. ஆனாலும் தலைவரே சொன்னதால் தட்டமுடியாமல், “எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை; அப்படி நான் சொல்லவும் இல்லை” என்று யு டர்ன் போட்டார் பூமி.

பூமிநாதனாவது, “ராஜினாமா செய்வேன்” என்று மட்டும் தான் சொன்னார். ஆனால், காரைக்குடி நகராட்சி மதிமுக கவுன்சிலர் பசும்பொன் மனோகரனோ, திமுக சேர்மன் முத்துத்துரையிடம் ராஜினாமா கடிதமே கொடுத்துவிட்டார். ”சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா” என மனோகரன் சொன்னாலும், அவருக்குள்ளும் பூமிநாதனைப் போன்றே அழுத்தங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

வைகோ

“முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்” என எந்த நிலையிலும் தளராது பேசி வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆனால், அவரது கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் அவ்வளவாக மதிப்பதில்லை என்ற நிலையே பரவலாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை தெற்கு எம்எல்ஏ-வான புதூர் பூமிநாதனிடம் பேசினோம். ’’எனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முல்லை பெரியாறு தண்ணீரைக் கொண்டுவருவதற்கான குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது கழிவு நீர் குழாய்கள் சேதமடைந்து அடைப்பு ஏற்படுகிறது. இதனை சரிசெய்யவும், குழாய் பதிக்கும் பணிகளை விரைவாக முடிக்கவும் மதுரை மாமன்ற கூட்டத்தின் போது அதிகாரிகளை வலியுறுத்தினேன். அப்போது ஆதங்கப்பட்டு நான் பேசிய சில விஷயங்களை வேறு மாதிரியாக செய்திவெளியிட்டு விஷயத்தைப் பெரிதுபடுத்திவிட்டனர்.

உண்மையில், முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை அமைச்சர்கள், மேயர் என அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுத்து வருகின்றனர். அதன் மூலம் எனது தொகுதியில் எராளமான பணிகள் செய்துள்ளேன். இப்போதுகூட மாரியம்மன் தெப்பகுளத்தைச் சீர்படுத்த முதல்வரிடம் நிதி கேட்டு மனு கொடுத்துள்ளேன். விரைவில் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.

புதூர் பூமிநாதன் எம்எல்ஏ

எனது தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவதால் என்னிடம் இருந்து தொகுதி மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றனர். அதை எல்லாம் செய்து கொடுக்க இன்னும் விரைவாக பணியாற்ற வேண்டியுள்ளது. அந்த பணிகளை விரைவாக செய்து தர வலியுறுத்தியே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தேன். மற்றபடி திமுகவுக்கும் எங்களுக்கும் எந்த முரண்பாடும் கிடையாது” என்றார்.

தேர்தலில் நிற்கும் வரை தான் கட்சியின் வேட்பாளர். தேர்தலில் வென்றுவிட்டால் யாருமே அனைவருக்கும் பொதுவான மக்கள் பிரநிதிகள் தான். மாமன்றக் கூட்டத்தில் வருத்தப்பட்டு புலம்பிய பூமிநாதன் இப்போது, “எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; எல்லாம் சரியாக நடக்கிறது” என்கிறார். இப்படி அவரை மாற்றிப் பேசவைப்பதற்கு எடுத்துக்கொண்ட அக்கறையிலும் அவசரத்திலும் பத்தில் ஒரு பங்காவது பூமிநாதன் சுட்டிக்காட்டும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவும் காட்டினால் நல்லது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE