மும்பை: மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை இன்று இடிந்து விழுந்தது.
சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மதியம் 1 மணியளவில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் 35 அடி உயர சிலை முழுமையாக இடிந்து விழுந்தது. சிலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து, சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி, இந்த சிலையை திறந்து வைத்தார். கோட்டையில் நடந்த கொண்டாட்டங்களிலும் அவர் பங்கேற்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசுப் பணியின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. என்சிபி (எஸ்பி) மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல், “மாநில அரசு தரமான பணிகளை செய்யாததே சிலை இடிந்துவிழ காரணம். பணியின் தரத்தில் அரசு கவனம் செலுத்தவில்லை. சிலையை திறப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்ட நிகழ்வை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. இந்த மகாராஷ்டிரா அரசு புதிய டெண்டர்களை விட்டு, கமிஷன்களை பெற்றுக்கொண்டு ஒப்பந்தங்களை வழங்குகிறது” என்றார்
» ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
» இலங்கைக்கு கடத்தவிருந்த 780 கிலோ பீடி இலைகள்: ராமேசுவரத்தில் போலீஸார் பறிமுதல்!
சிவசேனா (யுபிடி) எம்எல்ஏ வைபவ் நாயக், “மாநில அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க முயற்சி செய்யலாம். சிலை கட்டுவதற்கும், அமைப்பதற்கும் காரணமானவர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்'' என்றார்.
மகாராஷ்டிர அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்த அனைத்து விவரங்களும் என்னிடம் இல்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சிந்துதுர்க் மாவட்டத்தின் அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ரவீந்திர சவான் கூறியுள்ளார். அதே இடத்தில் புதிய சிலையை அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த பிரச்சினையை விரைவாகவும் திறமையாகவும் தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் ”என்று அவர் கூறினார்.