அபிஷேக் பானர்ஜியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!

By KU BUREAU

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், அக்கட்சியின் எம்.பியுமான அபிஷேக் பானர்ஜியின் 11 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9-ம் தேதி நடந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலைக்கு எதிரான கண்டன பேரணியின் போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், அபிஷேக் பானர்ஜியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்யப் போவதாக மிரட்டியதும், அதைச் செய்பவருக்கு ரூ. 10 கோடி சன்மானம் வழங்குவதாகவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.

இந்த வீடியோ குறித்து மேற்கு வங்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் ஆணையம், "குற்றவாளியின் இத்தகைய இழிவான நோக்கமும், பொதுவெளியில் அவரது அநாகரீகமான கருத்தும் சிறுமியின் மதிப்பை சீர்குலைப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

பெண் மருத்துவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில், மற்றொரு பாலியல் வன்கொடுமைக்கு அழைப்பு விடுப்பது சட்டத்தை மீறுவதாகும். இதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் சமூகத்திற்கு ஆபத்தான செய்தியை அனுப்பலாம்" என்று தெரிவித்துள்ளது.

மேலும், போக்சோ சட்டம், சிறார் நீதிச் சட்டம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளியின் மீது இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிக்கை அளிக்குமாறு காவல்துறைக்கு குழந்தைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸில் நம்பர் 2 ஆக உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE