நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்; வேறு சிறைக்கு மாற்றம்

By KU BUREAU

பெங்களூரு: சிறையில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளித்த விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றுமாறு சிறை அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது மேலாளர் மற்றும் இரண்டு சிறைவாசிகளுடன் அவர் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது. அதில் தனது கையில் காபி மற்றும் சிகரெட்டை அவர் வைத்துள்ளார். அது தற்போது பேசு பொருளாகி உள்ளது.

இது குறித்த முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய 7 அதிகாரிகளை கண்டறிந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். “இது ஒரு கடுமையான பாதுகாப்பு குறைபாடு” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஷ்வர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றுமாறு சிறை அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும், சிறை வளாகத்தை நேரில் பார்வையிட்டு, சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில காவல்துறை தலைமை இயக்குனரை முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.

இது குறித்து பேசிய ரேணுகாசுவாமியின் தந்தை காசிநாத் எஸ் சிவானகவுட்ரு, “இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். இதில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE