காஷ்மீர் தேர்தலுக்காக ஜம்மு, டெல்லி, உதம்பூரில் சிறப்பு வாக்குச்சாவடிகள்

By KU BUREAU

ஜம்மு: காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறி வசிப்பவர்கள் ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக ஜம்மு, டெல்லி, உதம்பூரில் சிறப்பு வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைக்கவுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1-ம் தேதிகளில் 3 கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீரிலுள்ள 90 பேரவைத் தொகுதிகளில் மக்கள்வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறி ஜம்மு, உதம்பூர், டெல்லியில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்காக 24 சிறப்பு வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைக்க வுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி பாண்டுரங் கே. போலே கூறிய தாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறி மற்ற இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், கடந்தமக்களவைத் தேர்தலில் வாக்களிக்க எம் எனப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் இந்த பேரவைத்தேர்தலில் அந்த விண்ணப்பங்களை அவர்கள் பூர்த்தி செய்ய தேவையில்லை. அவர்கள் வாக்களிக்க வசதியாக ஜம்மு, உதம்பூர், டெல்லியில் 24 சிறப்புவாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

விரைவில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

இவ்வாறு பாண்டுரங் கே.போலே கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE