ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை விமர்சித்த காங். தலைவர் கார்கே!

By KU BUREAU

புதுடெல்லி: யுபிஎஸ் (ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்) திட்டத்தில் உள்ள ‘யு’ மோடி அரசின் யு-டர்ன்களைக் குறிப்பதாக என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு எதிர்க்கட்சிகள் எழுச்சி கண்டுள்ளன. இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான அரசு அதன் அண்மைய முடிவுகளை திரும்பப் பெற்றுது. அந்த வகையில் யுபிஎஸ் திட்டத்தில் உள்ள ‘யு’ என்பது மோடி அரசின் யு-டர்ன்களை குறிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் வெளியான தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மக்களின் அதிகாரம் மேலாங்கத் தொடங்கி உள்ளது. நீண்ட கால மூலதன ஆதாயம், அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை பட்ஜெட்டில் திரும்பப் பெற்றது மோடி அரசு. வக்பு வாரிய மசோதாவை நாடாளுமன்றக் கூட்டு குழுவுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதாவை திரும்பப் பெற்றது, நேரடி நியமன அறிவிப்பை திரும்பப் பெற்றது. இந்த சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆட்சியில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்போம்” என தனது பதிவில் கார்கே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சனிக்கிழமை அன்று ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரியில் தேசிய ஓய்வூதிய திட்டம் அமல் செய்யப்பட்டது. இது புதிய ஓய்வூதிய திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக ஆய்வு செய்ய அப்போதைய நிதித் துறை செயலாளர் சோமநாதன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி, மத்திய அரசிடம் அண்மையில் பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரையறுக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது:

வரும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல் செய்யப்படும். இதன்மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களதுஅடிப்படை ஊதியத்தில் 10 சதவீதமும் மத்திய அரசு சார்பில் 14 சதவீத தொகையும் செலுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களதுபங்களிப்பை செலுத்த தேவையில்லை. ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 18.5 சதவீத தொகையை மத்திய அரசே செலுத்தும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE