கொடைவள்ளல் ஷிவ் நாடார்; ₹ 2042 கோடி நன்கொடை வழங்கி இந்தியாவில் முதலிடம்!

By காமதேனு

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார், இந்த ஆண்டில் ரூ. 2,042 கோடி நன்கொடைகள் வழங்கி இந்தியாவின் முன்னணி நன்கொடையாளராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார்.

அசிம் பிரேம்ஜி

78 வயதான அவர் ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். 2022 தர வரிசையுடன் ஒப்பிடும்போது 76 சதவீதம் உயர்ந்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடை பட்டியல் 2023 தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, முதன்மையாக கல்வி தொடர்பான காரணங்களுக்காக ரூ.1,774 கோடி நன்கொடை அளித்துள்ளார். இது அவரது முந்தைய பங்களிப்புகளை விட 267 சதவீதம் அதிகமாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் முறையே ரூ.376 கோடி மற்றும் ரூ.287 கோடி பங்களிப்புகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

முகேஷ் அம்பானி

ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை ரூ.5 கோடி அல்லது அதற்கும் அதிகமான ரொக்கமாகவோ அல்லது அதற்கு நிகரான பணமாகவோ நன்கொடையாக வழங்கிய நபர்களின் தரவரிசைப் பட்டியல்படி, அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி 2022-ம் ஆண்டிலிருந்து தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, கல்விக்காக ரூ.285 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

பஜாஜ் குடும்பம் 11 இடங்கள் முன்னேறி, முதன்மையாக கல்வித் துறையில் ரூ.264 கோடி நன்கொடைகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் மற்றும் குடும்பத்தினர் சுகாதாரத் துறையில் தொண்டு நிறுவனங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.241 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

அனில் அகர்வால் அறக்கட்டளை 2015-ல் தொடங்கப்பட்ட நந்த் கர் திட்டத்தை ஆதரிக்கிறது. இது இந்தியாவில் உள்ள 13.7 லட்சம் அங்கன்வாடிகளில் உள்ள ஏழு கோடி குழந்தைகள் மற்றும் இரண்டு கோடி பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவுகிறது.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி மற்றும் ரோகினி நிலேகனி பிலான்த்ரோபீஸின் தலைவர் அவரது மனைவி ரோகினி ஆகியோர் முறையே ரூ.189 கோடி மற்றும் ரூ.170 கோடி வருடாந்திர நன்கொடைகளுடன் 8வது மற்றும் 10வது இடங்களைப் பெற்றுள்ளனர். நிலேகனி தம்பதியினர் தங்கள் செல்வத்தில் பாதியை நன்கொடை நடவடிக்கைகளுக்கு அர்ப்பணித்து, 'வழங்கும் உறுதிமொழி'யில் கையெழுத்திட்டுள்ளனர்.

செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த சைரஸ் மற்றும் ஆதார் பூனாவாலா ஆகியோர் சுகாதாரப் பணிகளுக்காக ஆண்டுதோறும் ரூ.179 கோடி நன்கொடைகளுடன் 9வது இடத்தைப் பிடித்துள்ளனர். நான்கு இடங்கள் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

2022-23-ம் ஆண்டில் முதல் 10 பேர் ஒட்டுமொத்தமாக ரூ.5,806 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர், அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ. 3,034 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE