கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுகேந்து சேகர் ராய், பழம்பெரும் கேலிச்சித்திர கலைஞர் ஆர்.கே.லக்ஷ்மணனின் கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்து கொல்கத்தா போலீஸை கேலி செய்துள்ளார்.
ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலைசெய்யப்பட்டது தொடர்பாக சுகேந்துவின் சமூக வலைதள பதிவு ஒன்றுக்காக கொல்கத்தா போலீஸார் அனுப்பிய சம்மன் தொடர்பாக அவர் அப்பதிவிட்டுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸின் மூத்த அரசியல்வாதியான சுகேந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்.கே.லக்ஷ்மணனின் அந்த கேலிச் சித்திரத்தை பகிர்ந்துள்ளார். அந்தக் கேலிச் சித்திரத்தில் இளைஞர் ஒருவரை (தீமை மற்றும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்புபவர், விவாதிப்பவர்) போலீஸ்காரர் ஒருவர் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துச் செல்கிறார். அதனை வழிப்போக்கர்கள் பலர் வேடிக்கைப் பார்க்கின்றனர். அதன் கீழே ‘நிச்சயமாக நீங்கள் எந்த வதந்திகளையும் பரப்பவில்லை. உண்மையை நீங்கள் பரப்பியதே உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கேலிச்சித்திரம் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வெளியாகியிருந்தது.
இந்தப் பதிவுடன் சிரிக்கும் எமோஜி ஒன்றை மட்டுமே சுகேந்து சேகர் ராய் பகிர்ந்துள்ளார். அவர் எந்த விதமான விளக்கத்தையும் தனது பதிவில் தெரிவிக்காத நிலையிலும் அவரின் சமீபத்திய சமூக வலைதள பதிவொன்றுக்காக கொல்கத்தா போலீஸார் அவருக்கு அனுப்பிய சம்மன் தொடர்பாகவே இந்த பதிவு என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
» பாலியல்துன்புறுத்தல் வழக்குகள் |ஹெச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆர்.ஜி.கர் மருத்துவமனை பாலியல்துன்புறுத்தல் மற்றும் கொலை வழக்குத் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பதிவு மூலம் தவறான தகவல்களைப் பரப்பியதாக குற்றம்சாட்டி விசாரணைக்கு ஆஜராகும்படி இரண்டு சம்மன்களை அனுப்பியிருந்தது. உடனடியாக கைது உட்பட கொல்கத்தா போலீஸாரின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் பாதுகாப்புக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
பின்பு ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது, சுகேந்து ராயின் வழக்கறிஞர் அவர் சர்ச்சைக்குரிய சமூகவலைதள பதிவினை நீக்கி விடுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர், சுகேந்து தனது பதிவினை நீக்கி விட்டால் கொல்கத்தா போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். வழக்கினை முடித்துக் கொள்வதாக தெரிவித்தார். அன்று மாலை சுகேந்து தனது பதிவினை நீக்கினார்.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி.யின் தற்போதைய பதிவுக்கு கொல்கத்தா போலீஸார் எவ்வாறு எதிர்வினையாற்றுவர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.