டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் தொடர்பாக ஆர்எஸ்எஸ் சார்ந்த ஏபிவிபி மற்றும் இடதுசாரி ஆதரவு மாணவர் குழுக்களுக்கு இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) இந்த ஆண்டுக்கான மாணவர் சங்கத் தேர்தலுக்கு, தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழக பொது அமைப்புக் கூட்டம், அங்குள்ள சபர்மதி தாபாவில் நேற்று நடந்தது.
அப்போது அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), இடதுசாரிகளுடன் இணைந்த ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (டிஎஸ்எஃப்) இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருபிரிவினரும் தங்கள் தரப்பினர் காயமடைந்துள்ளதாக குற்றசாட்டியுள்ளனர். ஆனால் இதற்கு ஜேஎன்யு நிர்வாகத்திடமிருந்து உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
ஏபிவிபி உறுப்பினர்கள் மேடைகளை ஆக்கிரமித்து, சபை உறுப்பினர்கள் மற்றும் பேச்சாளர்களைத் தடுத்து தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வை தடுத்ததாக டிஎஸ்எஃப் குற்றம் சாட்டியுள்ளது.
சமூக வலைதளங்களில் இரு குழுவினரும் பகிர்ந்த வீடியோக்களில், ஏபிவிபி, ஜேஎன்யு மாணவர் சங்க உறுப்பினர்களும் காரசாரமாக வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் அவர்களை பல்கலைக்கழக பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டுப்படுத்த முயற்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக டிஎஸ்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ், ஏபிவிபி தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர் மீது தண்ணீரை தூக்கி ஊற்றும் காட்சிகளை காணலாம். ஜேஎன்யு மாணவிக்கு நிகழ்ந்த இத்தகைய அவமானகரமான செயல் பொறுத்துக்கொள்ளப்படக்கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஏபிவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஆரம்பத்தில், ஜேஎன்யு மாணவர் கூட்டமைப்பு சாதி ரீதியான அவதூறுகளை மேற்கொண்டது. ஏபிவிபி அமைப்பை, தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுப்பதே அவர்கள் நோக்கம். இடதுசாரி ஆதரவு அமைப்புகளான ஏஐஎஸ்ஏ, எஸ்எஃப்ஐ, டிஎஸ்எஃப் உள்ளிட்ட அமைப்பினர் இக்கூட்டத்தை தொந்தரவு செய்ய முயன்றனர். இருப்பினும், ஏபிவிபி அவர்களின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தது. இறுதியில், அவர்கள் ஏபிவிபி தொண்டர்களை தாக்கத் தொடங்கினர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!
அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!
கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!
தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!