வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் கட்சியும் எதிர்ப்பு: பாஜகவுக்கு நெருக்கடி!

By KU BUREAU

புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் பாஜகவின் மூன்றாவது கூட்டணிக் கட்சி இதுவாகும்.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா குறித்து பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) ஆகியவை தங்கள் எதிர்ப்பை ஏற்கெனவே பதிவு செய்திருந்தன. ஆனால், இம்மாத தொடக்கத்தில் மக்களவையில் நடைபெற்ற வக்ஃப் சட்டத்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி ராஜீவ் ரஞ்சன் இந்த சட்டத்திற்கு ஆதரவாக பேசினார்.

ஆனால், அதன்பின்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் இது தொடர்பாக அதிருப்தி வெடித்துள்ளது. பிஹார் மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜமா கான், வக்ஃப் சட்டத் திருத்தத்தின் சில விதிகள் மீது எதிர்ப்புகளை தெரிவிக்க முதலமைச்சர் நிதிஷை சந்தித்தார். நீர்வளத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரியும் முஸ்லிம் சமூகத்தின் அச்சம் பற்றி பேசினார். சவுத்ரி முதலமைச்சரின் நெருங்கிய நபராக அறியப்படுகிறார். அதுபோல ஜேடியு எம்எல்ஏ குலாம் கவுஸ் போன்ற மற்ற தலைவர்களும் இச்சட்டம் மீது கேள்வி எழுப்பினர்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மீது எழுந்துள்ள ஆட்சேபனையின் காரணமாக ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் ஜா மற்றும் பிஹார் மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜமா கான் ஆகியோர் மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்தனர். இவர்கள் அந்த மசோதாவில் பல திருத்தங்களை கோரியுள்ளனர்.

பிஹாரில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் முஸ்லிம்கள். எனவே அவர்களின் வாக்குகளை குறிவைத்து ஐக்கிய ஜனதா தளம், இந்த நகர்வினை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE