காஷ்மீர் சென்றுள்ள ராகுல் காந்தி, பரூக் அப்துல்லாவுடன் சந்திப்பு: பேரவை தேர்தலில் காங்கிரஸ்-என்.சி. இடையே கூட்டணி உறுதி

By KU BUREAU

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதென தேசிய மாநாட்டு கட்சி (என்.சி.) முடிவெடுத்துள்ளது.

கூட்டணி தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பை அடுத்து பரூக்அப்துல்லா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென தேசிய மாநாட்டு கட்சி முடிவெடுத்துள்ளது. மேலும், சிபிஐ (எம்) கட்சியின் முகமது யூசுப் தாரிகாமியும் எங்களுடன் இருப்பது கூடுதல் பலம். மக்களும் எங்களுடன்தான் இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.

நாம் அனைவருக்கும் மாநில அந்தஸ்து மிகவும் முக்கியமானது. எனவே முழு அதிகாரங்களுடன் நாங்கள் அதனை திரும்பவும் மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக, நாங்கள் இண்டியா கூட்டணியுடன் இணைந்து நிற்கிறோம். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

மாநில அந்தஸ்தை மீட்போம்: ராகுல் காந்தி கூறியதாதவது; சுதந்திரத்துக்குப் பிறகு ஒரு மாநிலம் (ஜம்மு காஷ்மீர்) யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு மாநில உரிமையை மீட்டுத் தந்து,அவர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்போம் என்று ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளோம்.

எனவே, ஜம்மு காஷ்மீரில் மாநில அந்தஸ்தை விரைவில் மீட்டெடுப்பது இண்டியா கூட்டணியின் முன்னுரிமை நடவடிக்கை. அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. மக்களின் ஜனநாயக உரிமை விரைவில் மீட்கப்படும் என நம்புகிறேன். இங்குள்ள மக்களுடன் எங்களுக்கு மிக ஆழமான உறவு எப்போதும் உண்டு. இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குசெப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளி்ல் மூன்று கட்டங்களாக தேர்தல்நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE