பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 50 நாட்களில் தண்டனையை உறுதிசெய்ய சட்டம் தேவை: அபிஷேக் பானர்ஜி கோரிக்கை

By KU BUREAU

கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 50 நாட்களுக்குள் தண்டனையை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

விரைவான மற்றும் கடுமையான நீதியை உறுதி செய்யும் வகையில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவர மத்திய அரசை மாநிலங்கள் வலியுறுத்த வேண்டும் என்று அபிஷேக் பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் கடந்த 10 நாட்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 900 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த கொடூரமான குற்றத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடிய காலத்திலேயே மீண்டும் இவ்வளவு கொடூரங்கள் நடந்துள்ளன" என்று அவர் கூறினார்.

மேலும், “தினமும் நாட்டில் 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு 4 மற்றும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் 1 பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இப்போது ஒரு தீர்க்கமான நடவடிக்கை அவசர தேவையாக உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 50 நாட்களுக்குள் விசாரணை மற்றும் தண்டனையை கட்டாயமாக்கும் வலுவான சட்டங்கள் நமக்குத் தேவை. கடும் தண்டனைகள் குறித்து வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல், விரைவான மற்றும் கடுமையான நீதியை உறுதிப்படுத்தும் வகையில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE