எய்ம்ஸ் மருத்துவர்களின் 11 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் ஏற்பு!

By KU BUREAU

புதுடெல்லி: கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராடிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கம் தனது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் 11 நாட்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசத்தின் நலன் மற்றும் பொது சேவையின் உணர்வுக்காக ஆர்டிஏ(எய்ம்ஸ்) தனது 11 நாள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி சம்பவத்தை கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு பிரச்சினையை நிவர்த்தி செய்ய ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ள உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சகங்களுடன் தொடர்பு கொண்டு சுகாதாரப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புவோம்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு செயல்படும். எனவே மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடங்க வேண்டும். உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று உறுதியளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE