ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை பெற்று தருவோம்: ராகுல் காந்தி உறுதி

By KU BUREAU

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநில அந்தஸ்து மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீநகரில் இன்று காலை ஜம்மு காஷ்மீர் முழுவதும் இருந்து வந்த காங்கிரஸ் தொண்டர்களுடன் உரையாடிய பிறகு செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, “நீங்கள் கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் ஜனநாயக உரிமைகள் திரும்பப் பெறப்படும் என்ற நமது தேசிய அறிக்கை தெளிவாக உள்ளது. ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மற்றும் அதன் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பது காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக்கு முன்னுரிமையான பணியாகும்.

நீங்கள் கட்சியின் தொண்டர்கள் அல்ல, குடும்பம். ஜம்மு-காஷ்மீருக்கு அவர்களின் மாநில அந்தஸ்து மிக முக்கியமான விஷயம். இந்திய வரலாற்றில், சுதந்திரத்திற்குப் பிறகு, பல யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரில் மட்டுமே நடந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், வெறுப்பு மிக்க உலகில் அன்பைக் காட்ட வேண்டும். வெறுப்பினை அன்பினால் தோற்கடிக்க முடியும். நாமெல்லாம் சேர்ந்து அன்பினால் வெறுப்பினை ஒழிப்போம்” என்று அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்துகொண்டார்

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறும்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE