மருத்துவர்கள் உடனே பணிக்குத் திரும்புங்க: உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - உச்ச நீதிமன்றம் உறுதி! 

By KU BUREAU

புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போராடி வரும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

விசாரணையின் தொடக்கத்தில், எய்ம்ஸ் நாக்பூரில் உள்ள மருத்துவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்

அதற்கு, "பணியில் இருந்தால் ஆப்சென்ட் எனக் குறிக்கப்பட மாட்டார்கள், பணியில் இல்லை என்றால் சட்டம் பின்பற்றப்படும். முதலில் பணிக்குத் திரும்பச் சொல்லுங்கள். எந்த மருத்துவர் மீதும் பாதகமான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். பிறகு சிரமம் ஏற்பட்டால் அதன் பின்னர் எங்களிடம் வாருங்கள். ஆனால் மருத்துவர்கள் முதலில் பணிக்கு திரும்பட்டும்" என்று தலைமை நீதிபதி கூறினார்.

தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “சில சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் நியமனத்திற்காக மக்கள் இரண்டு வருடங்கள் வரை காத்திருக்கின்றனர். எனவே ஏழை மக்களை ஏமாற்றத்தில் விட முடியாது. மருத்துவர்கள் பணிக்குத் திரும்பட்டும். அவர்கள் பணிக்குத் திரும்பியதும், அதிகாரிகள் எதிர்மறையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க நீதிமன்றம் அறிவுறுத்தும்.

பொது மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளோம். எனது குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நான் அரசு மருத்துவமனையின் தரையில் தூங்கினேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்றுவது எங்களுக்குத் தெரியும்.

சில சமயங்களில் மருத்துவர்களுக்கு கிட்டத்தட்ட 48 மணிநேரம் பணி இருக்கும். அப்போது யாராவது உங்களை தொந்தரவு செய்தால் எதிர்க்கும் உடல் அல்லது மன நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து பணிக்குழுவினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு செயல்படும். எனவே மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடங்க வேண்டும். உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE