'ஓலா' , 'உபெர்' போன்ற டாக்ஸி சேவை மற்றும் செயலி பயன்பாடு அல்லாத நகர டாக்ஸி சேவைகளுக்கு நிலையான கட்டண விதியை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் 'ஓலா' , 'உபெர்' போன்ற டாக்ஸி சேவை மற்றும் செயலி பயன்பாடு அல்லாத நகர டாக்ஸி சேவைகளுக்கு ஒரே சீரான கட்டணத்தை வசூலிக்கும் புதிய விதியை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிப்படி, டாக்ஸி வாகனங்களின் விலையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலை கொண்ட வாகனங்களுக்கு, முதல் 4 கிலோ மீட்டருக்கான நிலையான கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கிலோ மீட்டருக்கு ரூ.24 கூடுதல் கட்டணமாக வசூலிக்க அனுமதித்துள்ளது.
ரூ. 10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரம்புக்குள் உள்ள டாக்ஸிகளுக்கு முதல் 4 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.115 ஆகவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 28 கூடுதல் கட்டணமும் வசூலித்து கொள்ளலாம்.
ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட விலை கொண்ட டாக்ஸிகளுக்கு முதல் 4 கிலோ மீட்டருக்கு ரூ.130 நிலையான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.32 வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேர பயணமான நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கூடுதலாக 10 சதவீதம் வசூலிக்க புதிய விதிகள் அனுமதிக்கிறது. முதல் 5 நிமிட காத்திருப்பு நேரம் பயணிகளுக்கு இலவசம். அதன் பிறகு ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ. 1 கட்டணம் பொருந்தும். பயணிகளிடமிருந்து 5 சதவீத ஜிஎஸ்டி மற்றும் சுங்க கட்டணங்களை வசூலிக்கவும் டாக்ஸி இயக்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண விதியானது, செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவைகளுக்கான அதிக கட்டணங்களை நீக்கியுள்ளது. இதற்கு முன் இந்த வகை டாக்ஸிகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, ‘பீக் ஹவர்ஸ்’ கட்டணங்கள் மிக அதிகமாக வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
அரசின் புதிய விதிகளை ஓலா, உபெர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஆனால், அடிப்படைக் கட்டணம் அதிகரித்துள்ளதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். முன்பு, 4 கிலோ மீட்டர் சவாரிக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது புதிய கட்டண விதிப்படி, அடிப்படை கட்டணம் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
'இந்திய இசைக்குழுவினருக்கு ‘கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!
அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!
ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!
நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!
ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!