டெல்லி: எய்ம்ஸ், சப்தர்ஜங் மற்றும் அப்பல்லோ உட்பட பல மருத்துவமனைகள் மற்றும் ஒரு வணிக வளாகத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடங்களில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மத்திய டெல்லியின் சாணக்யா பூரியின் நங்லோயில் உள்ள மருத்துவமனையிலிருந்து மதியம் 1.04 மணிக்கும், ப்ரைமஸ் மருத்துவமனையிலிருந்து மதியம் 1.07 மணிக்கும் தீயணைப்பு துறைக்கு அழைத்து தங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவலை கூறியதாக டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு படையினர், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கே தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரி கூறினார். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பட்டியலில் எய்ம்ஸ், சப்தர்ஜங், அப்பல்லோ, மூல்சந்த், மேக்ஸ் மற்றும் சர் கங்கா ராம் மருத்துவமனைகள் உட்பட சுமார் 50 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று போலீஸார் தெரிவித்தனர்.
"உங்கள் கட்டிடத்திற்குள் பல வெடிபொருட்களை நாங்கள் வைத்துள்ளோம். அவை கருப்பு பேக்கில் வைக்கப்பட்டுள்ளன. குண்டுகள் இன்னும் சில மணிநேரங்களில் வெடிக்கும். நீங்கள் இரத்த வெள்ளத்தில் மூழ்கி விடுவீர்கள், உங்களில் யாரும் தொடர்ந்து வாழத் தகுதியற்றவர்கள். கட்டிடத்தில் உள்ள அனைவரும் தங்கள் உயிரை இழக்க நேரிடும்.
» அவசியமில்லாமல் குண்டர் சட்டம்; இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? - உயர் நீதிமன்றம் கேள்வி
» சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனத்தை தடுக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
மனித குலத்துக்கான மோசடியைத் தவிர என்னிடம் இடைவிடாது வேறு எதுவும் இல்லை. இன்று பூமியில் உங்கள் கடைசி நாள். பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதை நாங்கள் நிறுத்த மாட்டோம். குழுவின் பெயரை நியூஸ் அவுட்லெட்டுகளுக்கு கொடுங்கள்" என்று மதியம் 12.04 மணிக்கு ஜிமெயில் மூலம் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல்களுக்கு பின்னால் 'கோர்ட்' என்ற குழு இருப்பதாக மின்னஞ்சல் கூறுகிறது. இன்று பிற்பகலில், மத்திய டெல்லியின் கனக்யா மாலுக்கும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கு சோதனை நடத்தப்பட்டதில் சந்தேகத்திற்கிடமான எதுவும் மீட்கப்படவில்லை என்று அதிகாரி கூறினார். டெல்லி மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவத்தால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.