நாகை - இலங்கை கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும்: நிர்வாகம் திடீர் அறிவிப்பு

By KU BUREAU

நாகப்பட்டினம்: நாகை-இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை இயக்கப்படும் என கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பயணிகள் முன்பதிவு செய்திருந்ததாலும், காலநிலை மாற்றத்தாலும், கப்பல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் வருகை போதிய அளவில் இல்லாததால் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் கப்பல் சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.15-ம் தேதி வரை புதிய நடைமுறை அமலில் இருக்கும் என கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் நிரஞ்சன் தகவல் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஆனால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், தொடங்கிய இரண்டாவது நாளே கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்குப் பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனையடுத்து கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சிவகங்கை என்ற பெயரில் பயணிகள் கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடைந்தது. பிறகு ஆகஸ்ட் 17- ஆம் தேதி காலை அக்கப்பல் 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகையை வந்தது.

தொடா்ந்து 18-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் 123 சாதா இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளது. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டியுடன் ரூ.7,500, சாதா இருக்கைக்கு ரூ.5000 ஜிஎஸ்டியுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.

முழுவதும் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் கப்பலில் உள்ளன. சாம்பார் சாதம், தயிர் சாதம் தொடங்கி நூடுல்ஸ் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அனைத்து பயணிகளுக்கும் லைப் ஜாக்கெட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE