மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு: கல்லூரி மாணவி கைது

By KU BUREAU

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வரும் மாணவி ஒருவர் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் "கிர்தி சோஷியல்" என்ற கணக்கில் கீழ் செயல்பட்ட கிர்த்தி ஷர்மா என்பவர், முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்ல மற்றவர்களை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 31 வயதான முதுநிலை பயிற்சி மருத்துவரின் அடையாளம் மற்றும் புகைப்படத்தை வெளிப்படுத்தியதாகவும் கிர்த்தி ஷர்மா மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்ஜி கார் மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக மூன்று இன்ஸ்டாகிராம் பதிவுகளை பதிவேற்றிய கிர்த்தி ஷர்மாவின், இன்ஸ்டாகிராம் ஐடி ‘கிர்தி சோஷியல்’ மீது புகார் பெறப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியது, மேற்கு வங்கத்தின் முதலமைச்சருக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகள் மற்றும் முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் அளித்தல் போன்ற பதிவுகளை அவர் பகிர்ந்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் தொடர்பான சமூக வலைதள பதிவுகள் மீது கொல்கத்தா காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிய திரிணமூல் எம்.பி சுகேந்து சேகர் ரேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வதந்திகளைப் பரப்பியதாகவும், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகவும் முன்னாள் பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜி மற்றும் இரண்டு மருத்துவர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE