தொடரும் மருத்துவர்கள் போராட்டம்: டெல்லி சுகாதார அமைச்சகம் முன்பு வெளிநோயாளிகள் சேவை வழங்க முடிவு

By KU BUREAU

புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், திங்கள்கிழமை டெல்லியில் உள்ள நிர்மான் பவன் (சுகாதாரத்துறை அமைச்சகம்) முன்பு வெளிநோயாளிகள் சேவை வழங்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் (AIIMS)-ன் உறைவிட மருத்துவர்கள் அமைப்பான ஆர்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "திங்கள்கிழமை நிர்மான் பவனுக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், கண் சிகிச்சை மற்றும் எலும்பியல் உள்ளிட்ட 36 சிறப்பு நிபுணர்கள் அங்கு இருப்பார்கள். மருத்துவர்கள் காலை 11 மணிக்கு மருத்துவர்கள் நிர்மான் பவனை அடைவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல்துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தேசிய தலைநகரில் மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் திங்கள்கிழமை இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகுதியில் தங்களின் போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே, சஃப்தர்ஜங் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் ஒருவர் கூறுகையில்,"மருத்துவர்களுக்கான மத்திய பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு வழங்கியிருக்கும் உறுதி ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. என்றாலும், ஏழு நாட்கள் கடந்தும் நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் ஏற்கனே சொன்னது போல் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.

ஆக.12ம் தேதி மாலை டெல்லியில் மருத்துவர்களின் போராட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த போராட்டம், வெள்ளிக்கிழமை முதல் பொது இடத்தில் நடக்கத் தொடங்கியது.

மத்திய அளவிலான சட்டத்தை உருவாக்க ஆக.15ம் தேதி அமைக்கப்பட்ட செயல் குழுவில், எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சஃப்தர்ஜங்க் மருத்துவமனை, குரு தேக் பகதூர் மருத்துவமனை, மவுலானா ஆசாத் மருத்துவக்கல்லூரி மற்றும் லேடி ஹரிங்டன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE