தெற்கு நாடுகளில் தீவிரவாதம், பிரிவினைவாத அச்சுறுத்தல்கள்: காணொலி மூலம் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கவலை

By KU BUREAU

புதுடெல்லி: தெற்கு நாடுகளில் தீவிரவாதம், இடதுசாரி தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியலில் குளோபல் நார்த், குளோபல் சவுத் ஆகியஇரு அணிகள் செயல்படுகின்றன. குளோபல் நார்த் என்று அழைக்கப்படும் வடக்கு நாடுகளின் அணியில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகள் உள்ளன.

குளோபல் சவுத் என்றழைக்கப்படும் தெற்கு நாடுகளின் அணியில் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகள் உள்ளன. இந்த அணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் அண்மைக் காலமாக தெற்கு நாடுகள் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் தெற்கு நாடுகள் அணியின் உச்சி மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில்100-க்கும் மேற்பட்ட நாடுகளின்தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையும், நிறைவு உரையும் ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்புகளில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழலில் உலகின் சில பகுதிகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. இவை உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உருவெடுத்து உள்ளன.

ஏற்கெனவே பருவநிலை மாறுபாடு பிரச்சினையால் அடுத்தடுத்து இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறோம். தற்போது போர்களின் எதிர்விளைவால் சர்வதேச அளவில் உணவு தானியங்கள், பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதோடு தெற்கு நாடுகளில் தீவிரவாதம், இடதுசாரி தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவையும் நமதுசமூகங்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ளன.

இந்த சூழலில் தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். சர்வதேச அரங்கில் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும். ஒரு நாட்டின் வெற்றி அனுபவங்களை சக நாட்டுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

உலக மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு மக்கள், தெற்கு நாடுகளில் வசிக்கின்றனர். நமது நாடுகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு இந்தியாவின் அனுபவங்கள், திட்டங்களை தெற்கு நாடுகளோடு பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம். அடுத்த மாதம் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நமது ஒற்றுமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும்.

தெற்கு நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய தொழில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு முதல்கட்டமாக இந்தியாசார்பில் ரூ.21 கோடி நிதி வழங்கப்படும். அதோடு தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும். தெற்கு நாடுகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் அனுப்பப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE